தொழில் பூங்காவுக்கு அறிவிக்கப்பட்ட நிலம் பத்திர பதிவுக்கு தடை:விவசாயிகள், பொது மக்கள் கடும் அதிர்ச்சி
அன்னுார்:அன்னுார் தாலுகாவில் தொழில் பூங்காவுக்கு என அறிவிக்கப்பட்ட நிலத்தை கிரயம் செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிட்கோ) ஒரு உத்தரவு பிறப்பித்தது. இதில் அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், பொகலூர் ஆகிய நான்கு ஊராட்சிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில், இலுப்பநத்தம் மற்றும் பள்ளே பாளையம் என ஆறு ஊராட்சிகளில் தொழில் பூங்கா அமைப்பதற்காக 3850 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் நமது நிலம் நமதே அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்னுாரில் தாலுகா அலுவலகம் முற்றுகை, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அன்னுாரில் சுற்றுப்பயணம் செய்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். தொழில் பூங்கா அமைப்பதை கைவிட வேண்டும். விவசாய நிலங்களில் தொழில் பூங்கா அமைக்க கூடாது. தொழிலில் பின்தங்கி உள்ள மாவட்டங்களில் தரிசாக உள்ள நிலத்தை மட்டுமே கையகப்படுத்த வேண்டும். தொழில் பூங்கா துவக்கப்பட்டால் பா.ஜ., தொடர் போராட்டம் நடத்தும் என அன்னுாரில் அறிவித்தார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியும் அன்னுாரில் தொழில் பூங்கா நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.இது குறித்து நமது நிலம் நமதே அமைப்பினர் கூறியதாவது : டிட்கோ தெரிவித்துள்ள 3,800 ஏக்கரில் 90 சதவீதம் விவசாய நிலங்கள். கால்நடை வளர்ப்பு இங்கு அதிகமாக உள்ளது. எனவே விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைக்க வேண்டாம். ஏற்கனவே அன்னுார் தாலுகாவில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர வேண்டி உள்ளது. தர மாட்டோம்
மேலும் 60 ஆண்டு காலமாக காத்திருந்து தற்போது அத்திக்கடவு திட்டத்தில் குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிகளில் குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. பலரும் கூடுதலாக விவசாயம் செய்யவும் கால்நடை வளர்க்கவும் தயாராகி வருகின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி எம்.பி., ராஜா மற்றும் டிட்கோ அதிகாரிகள், கம்பெனி நிலத்தில் மட்டுமே தொழில் பூங்கா அமைக்கப்படும். ஒரு சென்ட் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தனர். இதை ஏற்று தொடர் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் இன்று (நேற்று) அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்திலும், ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்திலும், டிட்கோ தெரிவித்த நிலங்களை விற்பனை செய்யவும், அடமானம் செய்யவும் சென்றபோது, சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதுகுறித்து கூடுதல் விபரங்களை மாவட்ட, மாநில அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். ஒரு அடி விவசாய நிலத்தை கூட தொழில் பூங்காவுக்கு தர மாட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஓரிரு நாட்களில்...
பத்திர எழுத்தர்கள் கூறுகையில், 'அதிகாரிகள் இதுகுறித்து ஓரிரு நாட்களில் விவரமாக தெரிவிப்பதாகவும், டிட்கோ அறிவித்த 3,850 ஏக்கர் நிலத்தை தற்போது வாங்கவோ விற்கவோ அடமானம் செய்யவோ முடியாது எனத் திருப்பி அனுப்பி விட்டனர்' என்றனர்.