உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இணைய வழி பூச்சிமருந்து விற்பனை: ரொம்பவே உஷாரா இருக்கணும்...

இணைய வழி பூச்சிமருந்து விற்பனை: ரொம்பவே உஷாரா இருக்கணும்...

பெ.நா.பாளையம்: 'இணையவழி வழியாகவோ மற்றும் விவசாய நிலங்களுக்கு நேரடியாகவோ செல்லும் முகவர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை, விவசாயிகள் வாங்க வேண்டாம்' என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை எச்சரித்து உள்ளது. ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை இணைய வழி வாயிலாகவோ அல்லது தாங்கள் தோட்டங்களில் நேரடியாக வந்து விற்பனை செய்யும் முகவர்களிடமோ, வேளாண்மை துறையால் வழங்கப்படும் உர உரிமம் கிடையாது. இவ்வாறு இணைய வழியில், உரிமம் பெறாமல், உரங்கள் விற்பனை செய்வது உரக்கட்டுப்பாடு சட்டத்தை மீறிய செயல். இம்மாதிரியான உரங்களை வாங்கி பயன்படுத்துவதால், சாகுபடி செலவு அதிகமாவதுடன் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. விவசாயிகள், வேளாண் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற உர விற்பனை நிலையங்கள் வாயிலாகவே ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். உர ஆய்வாளர்கள் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளர்கள், தரத்தை உறுதிப்படுத்தி, அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தி வருகின்றனர். நகர்ப்புற மாடித்தோட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள், உரம் தொடர்பான இணையத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், குறைவான விலையில், தரமான உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை வாங்கி பயன்படுத்த வேண்டும். வேளாண்மை துறை வாயிலாக வழங்கப்படும் பயிற்சி மற்றும் கூட்டங்களில், இணைய வழி வாயிலாக ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் பரிவர்த்தனை செய்வதற்கான வழிவகை இல்லை என்பது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை பயிர்களுக்கு, தொடர்புடைய துறையின் அலுவலர்களின் அறிவுரைப்படி உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்துமாறு, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ