உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை உழவால் நன்மைகள்; வேளாண் துறையினர் அறிவுரை

கோடை உழவால் நன்மைகள்; வேளாண் துறையினர் அறிவுரை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ள வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.கோடை காலம் துவங்கிய இருப்பதால், மானாவாரி விவசாயிகள், தங்கள் நிலத்தில், மண் வாயிலாக பரவும் பூச்சிகள் மற்றும் கூட்டுப் புழுக்களை அழிக்க, கோடைகால உழவு மேற்கொள்ள வேண்டும்.அறுவடை முடிந்த நிலத்தில் ஆழமாக உழவு செய்வதன் வாயிலாக, அதிக அளவு மண் அரிப்பை தடுக்க முடியும். மேலும், உழவுக்கு பின் பயிர்களின் தன்மை மேம்பட அதிக வாய்ப்புள்ளது.ஆழமாக உழவு செய்வதால், மழை நீர் 10 முதல் 15 செ.மீ., வரை உள் செல்லும். இதனால் நீர் ஆவியாவதை தடுப்பதோடு, பயிருக்கு தேவையான அளவு நீர் கிடைக்கும்.கோடை உழவு செய்யும்போது ஐந்து கொத்து கலப்பை கொண்டு, சரிவான பகுதிக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும். குறிப்பாக, கடைசி விதைப்பு உழவை சரிவுக்கு குறுக்காக முடிக்க வேண்டும். இப்படி செய்தால் மழை நீர் வெளியேறாமல் நிலத்தில் தங்கும்.மேலும், நிலக்கடலை மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் நிலங்களில், சிகப்பு கம்பளிப்புழு மற்றும் அமெரிக்கன் படைப்புழு ஆகியவற்றின் கூட்டுப் புழுக்கள் மண்ணுக்கு உள்ளே இருந்து, மேற்பரப்பிற்கு வந்து விடும். இந்தப் புழுக்கள் வெயிலின் தாக்கத்தால் இறந்துவிடும். இதனால், பயிர்களின் வளர்ச்சி பருவத்தில் பூச்சி தாக்குதல் குறையும். மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகரிக்கும், பயிர் வளர்ச்சியடையும்.இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை