கல்லுாரிகளுக்கு பாரதியார் பல்கலை அறிவுரை
கோவை : பாடத்திட்டத்தில் சமீபத்திய தொழில்நுட்பங்களை புகுத்த பாரதியார் பல்கலை, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.பாரதியார் பல்கலையில் ஆண்டுதோறும் பாடத்திட்ட குழுக்கள் கூடி, அப்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.அதன் படி, பாரதியார் பல்கலை, தன்னாட்சி கல்லுாரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் 100க்கும் மேற்பட்ட பாடத்திட்ட குழுக்கள் உள்ளன.பாடத்திட்ட குழுக்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை, பாடத்திட்டங்கள் ஆய்வு செய்து மாற்றங்கள் ஏற்படுத்தும். அதேசமயம், ஆண்டுதோறும் மாற்றங்கள் தேவையா என்பதையும் ஆய்வு செய்து இருப்பின் மாற்றிக்கொள்ள இயலும்.சமீபத்தில் நடந்த கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், ஐ.ஓ.டி., உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களில் உள்ள, சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பாடத்திட்டத்தில் புகுத்த பாரதியார் பல்கலை பாடத்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பாரதியார் பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா கூறியதாவது:2022 - 23 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய பாடத்திட்டங்கள்வடிவமைக்கப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தற்போது தொழில்நுட்பங்கள் மேம்பாடு அடைந்துள்ளதால், அவற்றையும் பாடத்திட்டத்தில் புகுத்த திட்டமிடப்பட்டது.அதன்படி, பல்கலை பாடத்திட்ட குழு நடத்திய கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதில், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.