கட்டுமான செலவை குறைக்க உதவுகிறது பி.ஐ.எம். டெக்னாலஜி
சமீபகாலமாக கட்டுமான துறையில் 'டிஜிட்டல்' மாற்றங்கள் வேகமாகி வருகின்றன. இதில், குறிப்பிடத்தக்கது கட்டட தகவல் மாதிரிகள்(பி.ஐ.எம்.,). பி.ஐ.எம்., என்பது '3டி' மாதிரிகளை உருவாக்கும் மென்பொருள் மட்டுமல்ல; கட்டடத்தின் பொருள் மற்றும் செயல்பாட்டு தகவல்களை ஒருங்கிணைத்து டிஜிட்டல் வடிவில் சேமித்து பகிரும் முழுமையான செயல்முறை.
Galleryஇந்த முறையால் சிவில் இன்ஜினியர்கள், வடிவமைப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் நேரடியாக ஒத்துழைத்து பணிபுரிய முடியும். இதனால் கட்டுமான திட்டங்கள் வேகமாகவும், திறமையான முறையிலும் முன்னேறும் என்கிறார், கோவை மண்டல கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின்(கிரிக்) மாநில இணை செயலாளர் ராஜதுரை. அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது... பி.ஐ.எம்., என்பது கட்டட கூறுகளின் அளவுகள், இடவமைப்பு, பண்பு மற்றும் சூழல் தொடர்புகளை ஒருங்கிணைக்கிறது. வரைபடங்களில் இல்லாத மின்னணு ஒருங்கிணைப்பு மற்றும் நேரடி ஒத்துழைப்பு இதனால் கிடைக்கிறது. பலர் ஒரே மாதிரி பணியாற்றுவதால் தவறுகள், மறுபராமரிப்பு மற்றும் திட்ட தாமதங்கள் குறையும். உதாரணத்துக்கு, பாலம் வடிவமைப்பில் பி.ஐ.எம்., வாயிலாக சுமை பரப்பும் பகுதி, கட்டமைப்பின் செயல்பாடு, சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியன குறித்து கட்டுமானத்துக்கு முன்பே கணிக்க முடியும். இதனால் செலவுகள் குறையும், செயல்திறன் அதிகரிக்கும். வடிவமைப்பு மற்றும் காட்சி மூலம் '3டி' மாதிரிகள் உருவாக்கி, சிக்கலான கட்டமைப்புகளை காணலாம். எதிர்கால பாதிப்புகளை தவிர்க்க முடியும். கட்டுமான திட்டமிடலின்போது, பி.ஐ.எம்., 4டி திட்டமிடல் பயன்படுத்தி, 3டி மாதிரியை நேரத்துடன் இணைத்து கட்டுமான ஒழுங்குகளை திட்டமிடலாம். செலவு கணக்கீடு வாயிலாக பொருட்கள் மற்றும் அளவுகள் மாதிரியில் சேர்க்கப்பட்டு, சரியான பட்ஜெட் மற்றும் செலவு திட்டமிடல் நடக்கும். பி.ஐ.எம்., வாயிலாக சக்தி பயன்பாடு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை கணித்து பசுமை கட்டட நடைமுறைகளை முன்னெடுக்கலாம். மொத்தத்தில் இந்த செயல்முறையால் சிவில் இன்ஜினியரிங்கில் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் முழுமையான ஒருங்கிணைப்பையும், துல்லியமான மற்றும் குறைந்த செலவு கட்டுமானமும் சாத்தியமாகும். இவ்வாறு, அவர் கூறினார்.