உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெம் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை

ஜெம் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை

கோவை : ஜெம் மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில், 'வல்லமை தாராயோ' என்ற பெயரில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும், ரோஸ் தின நிகழ்வை நேற்று நடத்தியது. இதில், இலவச மார்பக பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் பழனிவேலு பேசுகையில், ''புற்றுநோய் பாதிப்புக்கு பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன. சரியான விழிப்புணர்வு, பரிசோதனை இருந்தால், 50 சதவீத புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அறியாமையே பல்வேறு அபாய விளைவுகளுக்கு காரணமாக அமைகிறது. பள்ளிகளில் ஆரோக்கிய கல்வியை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்,'' என்றார். போலீஸ் எஸ்.பி. கார்த்திகேயன், ஜெம் புற்றுநோய் மையத்தின், 40 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை துவக்கி வைத்தார். புற்றுநோயாளிகளுக்கான பிரத்யேக 'ஆன்கோ சப்போர்ட்' குழுவையும் துவக்கி வைத்தார். முழு உடல் பரிசோதனையில், புற்றுநோய் பாதிப்பு சார்ந்த பரிசோதனைகள் இல்லாத சூழலில், வரும் முன் தடுக்கும் நோக்கில், புற்றுநோய் வரும் வாய்ப்பு குறித்து அறியும் பரிசோதனையும் ஜெம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்வில், மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், நிர்வாகிகள் ஜெயா பழனிவேலு, பிரபா பிரவீன் ராஜ், ஜெம் கேன்சர் சென்டர் இயக்குனர் டாக்டர் பரத் ரங்கராஜன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !