UPDATED : செப் 15, 2026 11:30 PM | ADDED : செப் 15, 2026 08:02 PM
கோவை: பதிவு பெற்ற பொறியாளர் சங்கத்தின் 34ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க தலைவர் வேலுமயில் பேசியதாவது: அனைத்து கட்டட அனுமதியும் உள்ளாட்சியில் வழங்க வேண்டும். முந்தைய அரசுகள் அதை செய்யவில்லை. த.வெ.க. அரசு இதை நிறைவேற்ற வேண்டும். மாநகராட்சியில் பதிவுபெற்ற பொறியாளர்கள், அனைத்து பகுதிகளிலும் பணியாற்ற மாநில அளவிலான உரிமம் வழங்க 2025ல் அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள புதிய அரசாணைப்படி, நகர ஊரமைப்பிடம் உரிமம் எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொறியாளர் உரிமம் உள்ளாட்சித்துறை சம்பந்தப்பட்டது. நகர ஊரமைப்புக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. மாஸ்டர் பிளான் தயாரிப்பது, திட்ட சாலை வரைபடம் தயாரிப்பது உள்ளிட்டவை மட்டுமே நகர ஊரமைப்புத்துறையின் பணி. பழைய அரசாணைப்படி மாநகராட்சியில் பதிவு செய்தவர்கள், மாநிலம் முழுவதும் பணியாற்ற உரிமம் வழங்க வேண்டும். மாநகராட்சியில் கட்டட அனுமதி பெறுவதில் சிரமம் உள்ளது. நிறைய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அமைச்சர், கமிஷனர் ஆகியோரிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. காலியிட வரி, குடிநீர் வரி இணைப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும் என கமிஷனர் உத்தரவிட்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த பிரச்னைகளுக்கு தீர்வளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.