உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு போக்குவரத்து டிரைவருக்கு இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி!

அரசு போக்குவரத்து டிரைவருக்கு இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி!

கோவை; பணி நீக்கம் செய்யப்பட்ட டிரைவருக்கு இழப்பீடு வழங்காததால், கோவையில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி,63; கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகம், சுங்கம் டெப்போவில் கடந்த 1995ல் டிரைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இவரது கல்வி சான்றிதழ் போலி எனக்கூறி, கடந்த 2005, ஆக., 20 ல் மாடசாமியை பணிநீக்கம் செய்தனர். இதற்கு அப்ரூவல் தரக்கோரி, தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் அரசு போக்குவரத்து கழகம் மனு செய்தது. விசாரித்த தீர்ப்பாயம், சுப்பிரமணியன் ஒரிஜினல் சான்றிதழ்களை சரிபார்த்து, அவரது பணி நீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் வேலையில் சேர்க்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், போக்குவரத்து கழக அதிகாரிகள் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சுப்பிரமணியன், 2017 ல் ஓய்வு பெற்றார். விசாரித்த ஐகோர்ட், சுப்பிரமணியனுக்கு, 2005 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதிய பலன்கள் மற்றும் இழப்பீடு தொகை என மொத்தம், 67 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. அதன்பிறகும் இழப்பீடு வழங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். விசாரித்த சுப்ரீம் கோர்ட், கீழ் கோர்ட் தீர்ப்பின் படி இழப்பீட்டு தொகை வழங்க இறுதி உத்தரவு பிறப்பித்தது.அதை தொடர்ந்து, பல்வேறு கட்டமாக சுப்பிரமணியனுக்கு 56 லட்சம் ரூபாய் வழங்கினர். மீதி தொகை, 11 லட்சம் ரூபாய் வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், கோவை கூடுதல் லேபர் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, காந்திபுரம்- மருதமலை செல்லும் தடம் எண்:70, அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ