நடுவழியில் நின்ற பஸ் : பயணியர் பரிதவிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் மூன்று பணிமனைகளில் இருந்து, 105 அரசு டவுன் பஸ்கள் உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் ஒவ்வொன்றும், நாள் ஒன்றுக்கு, 280 முதல் 340 கி.மீ., துாரம் வரை இயக்கப்படுகின்றன.டவுன் பஸ்களை நம்பியே, சுற்றுப்பகுதி கிராம மக்கள், அலுவலகம், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர். போதிய பராமரிப்பின்றி இயக்கப்படும் டவுன் பஸ்களால், பயணியர் பரிதவித்தும் வருகின்றனர்.இதுஒருபுறமிருக்க, உதிரி பாகங்களில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக, டிரைவர் மற்றும் கண்டக்டர் திணறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பொங்காளியூர் அடுத்துள்ள மயிலாடுதுறைக்கு புறப்பட்ட (டி.என்., 38 என் 3486) பஸ், கோட்டூர் ரோட்டில், ஓம்பிரகாஷ் அருகே திடீரென பழுதாகி நின்றது. தொடர்ந்து, வேறு பஸ்சில் பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.பயணியர் கூறியதாவது:முறையாக பராமரிக்கப்படாத பஸ்கள், அவ்வப்போது, நடுவழியில் பழுதாகி நிற்பதும் வாடிக்கையாக உள்ளது. தற்போது, நடுவழியிலேயே பஸ் நிறுத்தப்பட்டது. பஸ்களில் பழுதான உதிரிபாகங்களுக்கு மாற்றாக புதிய பாகங்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.