மேம்பாலத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பேசலாமா? அ.தி.மு.க., குற்றச்சாட்டு; தி.மு.க., ஆட்சேபனை
கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும், ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வருவதாக, மேயர் ரங்கநாயகி அறிவித்தார். அப்போது, அ.தி.மு.க., மாமன்ற கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் குறுக்கிட்டு, ''அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டம். முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோரது பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். இதற்கு கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி பேசும்போது, ''அ.தி.மு.க., ஆட்சியில் 5 சதவீதமே முடிந்திருந்தது. தி.மு.க., ஆட்சியில் 95 சதவீத பணிகள் நடந்திருக்கின்றன,'' என்றார். அதற்கு பிரபாகரன், ''அ.தி. மு.க., ஆட்சியில் 55 சதவீத பணிகள் செய்யப்பட்டன. ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து விட்டு, பெருமை பேசலாமா,'' என கேட்டார். மத்திய மண்டல தலைவர் மீனா எழுந்து, ''அ.தி. மு.க., அறிவித்த திட்டங்களையும் தி.மு.க., செயல்படுத்துகிறது,'' என்றார். வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பேசும்போது, ''தி.மு.க., ஆட்சியில் அறிவித்த காந்திபுரம் மேம்பாலத்தின் வடிவமைப்பை மாற்றி, பயனின்றி கட்டினர். அ.தி.மு.க., கவுன்சிலரின் பேச்சை மன்ற பதிவேட்டில் நீக்க வேண்டும்,'' என்றார். கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் குளம், குட்டையை துார்வாரியதே சாதனை. அதை தவிர, வேறெந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை,'' என்றார். கூட்ட இறுதியில், முதல் வருக்கு நன்றி தெரிவித்து, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்களுக்கு முன்அனுமதி; விசாரிக்க அ.தி.மு.க., கோரிக்கை
அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில், ''மொத்தம், 103 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 50 தீர்மானங்களுக்கு மேயர் முன்அனுமதி வழங்கியிருக்கிறார். உள்நோக்கத்துடன் நடந்திருப்பதால், விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மேயரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.