கார் இன்ஜினில் கோளாறு; இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; கார் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, கரும்புக்கடை, முதல் வீதியை சேர்ந்த மிஸ்பா தக்கீம், ராமநாதபுரத்திலுள்ள 'கியா' ேஷாரூமில், கடந்த 2022, நவம்பர் 9 ல், 17.87 லட்சத்துக்கு புதிய கார் வாங்கினார். காரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், காரை ஓட்டிய ஒரு ஆண்டிற்குள் கார் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது. அவற்றை சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்கு சென்றார். அப்போது, சில உதிரிபாகம் மாற்ற வேண்டியிருப்பதாக தெரிவித்தனர். ஒரு வாரத்திற்கு பிறகு உதிரிபாகம் மாற்றி காரை திரும்ப ஒப்படைத்தனர். இதற்கு, சர்வீஸ் கட்டணமாக 1.50 லட்சம் ரூபாய் பெற்றனர். சர்வீஸ் செய்த பிறகும் காரில் பிரச்னை ஏற்பட்டதால் மீண்டும் புகார் செய்தார். ஆனால், கார் நிறுவனம் உரிய பதில் அளிக்கவில்லை.இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 1.50 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.