100 சவரன் வரதட்சணை கேட்ட கணவன் குடும்பம் மீது வழக்கு
கோவை:கோவையில், 100 சவரன் வரதட்சணை கேட்ட கணவன் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கோவை, டி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் குமாரதேவ். இவரது மகள் ரம்யாஸ்ரீ, 34, பெங்களூருவில் வசிக்கும் உறவினர் ஜெகத்ஜித்தை பெற்றோர் சம்மதத்துடன், 2024, பிப்., 22ல் திருமணம் செய்து கொண்டார். மாப்பிள்ளை வீட்டில், 200 சவரன் நகை வரதட்சணையாக கேட்டனர். ரம்யாஸ்ரீ பெற்றோர், 100 சவரன் நகை கொடுத்தனர். திருமணமான சில மாதங்களில், கூடுதலாக 100 சவரன் வரதட்சணை கேட்டு கணவரும், அவரது பெற்றோரும் ரம்யாஸ்ரீயை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினர். ரம்யாஸ்ரீ, கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். புகார் மனு, கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பப்பட்டது. விசாரித்த போலீசார், ஜெகத்ஜித் மற்றும் அவரது பெற்றோர் மீது, வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவின் கீழ், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.