இழப்பீடு பெற போலி ஆவணம் கொடுத்த இருவர் மீது வழக்கு
அன்னுார்: விபத்து காப்பீட்டு இழப்பீட்டு தொகை பெற, போலி ஆவணம் சமர்ப்பித்த இருவர் மீது அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு டிச. 31ம் தேதி அன்னுாரில், அவிநாசி சாலையில், ஊத்துப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காப்பீட்டு தொகை பெற லாரி உரிமையாளர் தரப்பில் மோட்டார் வாகன இழப்பீட்டுக்கான வழக்கு தொடரப்பட்டது. தனியார் காப்பீடு நிறுவனம், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காப்பீடு நிறுவன ஆவணங்களை பரிசோதித்தது. அவை போலியாக தயாரிக்கப்பட்டவை. தனியார் காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்பட்டவை அல்ல என கண்டறிந்தது. இதையடுத்து கோவை, ராமநாதபுரத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி கிளை மேலாளர் சதீஷ், 49, போலியாக காப்பீடு ஆவணம் சமர்ப்பித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அன்னுார் போலீசில் புகார் மனு அளித்தார். அன்னுார் போலீசார் லாரி ஓட்டுநர் முத்துக்குமார் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.