உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் சிசிடிவி கேமரா! மாணவர்கள் துன்புறுத்தலை தடுக்க சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை

பள்ளிகளில் சிசிடிவி கேமரா! மாணவர்கள் துன்புறுத்தலை தடுக்க சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை

பெ.நா.பாளையம்: தமிழக அரசு பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சிறு குழந்தைகள் உள்ளிட்ட மாணவ, மாணவியர் மீது வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென சி.பி.எஸ்.இ., அதிகாரி தெரிவித்துள்ளார். மாணவ, மாணவியரை பள்ளிக்கு உள்ளே வரும் சமூக விரோத கும்பல்களிடமிருந்து பாதுகாப்பது, அவர்களை கேலி, கிண்டல் செய்யும் சக மாணவர்கள் மற்றும் பிறரிடம் இருந்து காப்பாற்றுவது முக்கியமா னதாகும். இதற்கு நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்தவதை கட்டாயமாக்கும் பொருட்டு, பள்ளி நிர்வாக நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் கழிப்பறைகள் தவிர, பள்ளி நுழைவாயில்கள் வெளியேறும் பகுதிகள், படிக்கட்டுகள், வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 'சிசிடிவி' கேமரா ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த காட்சிகளை குறைந்தபட்சம், 15 நாட்களுக்கு சேமித்து வைக்கும் வகையிலான சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும், 15 நாட்கள் வரை அதிகாரிகள் அதை ஆய்வு செய்யும் வகையிலும், அதன் தரவுகளை பாதுகாக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா இல்லை. பள்ளிகளில் அதை கட்டாயப்படுத்த இதுவரை எவ்வித உத்தரவும், தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. தற்போது நகர் பகுதியில் உள்ள சில அரசு பள்ளிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள சில அரசு பள்ளிகளில் தனியார் உதவியுடன் 'சிசிடிவி' கேமரா அமைத்துள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் அரசு பள்ளிகளில் சட்டம் குறித்தும், பாலியல் துன்புறுத்தல் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்போது அரசு பள்ளிகளில் கட்டாயம் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டுமென தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால், போதிய நிதி இல்லாததால், இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு அரசு பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த போதிய நிதி வழங்கி, இத்திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். இதனால் அரசு பள்ளி மாணவ, மாணவியர் மீது நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ