பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்க கணக்கெடுப்பு தேவை
போ லி வாக்காளர், இறந்தவர்கள், ஊரை விட்டு போனவர்கள், வீடு மாறியவர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்க, இன்று முதல் ஸ்பெஷல் கணக்கெடுப்பு நடத்துகிறது, தேர்தல் கமிஷன். தி.மு.க. இதை எதிர்க்கிறது. இந்த கணக்கெடுப்பு தேவையா, இல்லையா? கோவை மக்களிடம் கேட்டோம்.'வரவேற்க வேண்டும்' சிலருக்கு இரு இடங்களில் ஓட்டு இருக்கும். ஒரு இடத்தில் தான் ஓட்டு போடுவர். பழைய முகவரி பதிவை நீக்க நேரம் இருக்காது. இதனால், அந்த இடத்தில் கள்ள ஓட்டு விழ வாய்ப்பு உள்ளது. அதை தடுக்கத்தானே தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கிறது. இதை வரவேற்க வேண்டும். - பிரசாந்த்குமார் கணபதி'கணக்கெடுப்பு தேவை' கணக்கெடுப்பு தேவை தான். உண்மையான வாக்காளர்கள் பாதிக்கப்படாத வகையில் செய்ய வேண்டும். இரண்டு இடத்தில் பெயர் இருப்பதாக சொல்லி, இரு இடங்களிலும் பெயர் நீக்கிவிட கூடாது. அதை கண்காணிக்க, மாநில அரசு பிரதிநிதிகளையும் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும். - பிரஜோத் குமார் அன்னுார்'நிச்சயம் அவசியம்' நாடாளுன்ற தேர்தலில் பூத் வரை போயும், பட்டியலில் பெயர் இல்லாமல் திரும்பியவர்கள் ஏராளம். ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற பிரச்னை தொடர்கிறது. இறந்தவர்கள், வேறு மாநிலங்களில் குடியேறியவர்கள் மற்றும் போலி வாக்காளர்களை நீக்க, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நிச்சயம் அவசியமானது. - ஸ்ரீ தண்ணீர்பந்தல்'கட்சிகள் ஒத்துழைக்கணும்' தீவிர திருத்தம் வரவேற்கத்தக்கது. பீகாரில் பல லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பல குளறுபடிகள் நடந்தது. அப்படி எதுவும் நடக்காமல் கவனமாக செய்ய வேண்டும். எல்லா கட்சிகளும் ஒத்துழைத்து நடந்தால் உண்மையான பலன் கிடைக்கும் . - அருண் விளாங்குறிச்சி.'திருத்தம் அவசியம்' வாக்காளர் பட்டியல் திருத்தம் ரொம்ப அவசியம். போலி வாக்காளர் எண்ணிக்கை வெளியே தெரியவரும். இதனால் தேர்தல் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். எப்போதாவது செய்யாமல், இந்த வேலையை தேர்தல் கமிஷன் எப்போதுமே செய்ய வேண்டும். கள்ள ஓட்டு அப்போது தான் ஒழியும். - தாரணி அன்னூர்'போலி குறையும்' வாக்காளர் பட்டியல் திருத்தம் மிகவும் அவசியமானது. இதை ஏன் தமிழக அரசு எதிர்க்கிறது என்று புரியவில்லை. மத்திய அரசு விருப்பப்படி, தேர்தல் ஆணையம் செய்வதாக நம்பி தமிழக அரசு எதிர்க்கிறதோ என தோன்றுகிறது. போலி வாக்காளர் குறையும் என்பதால் இதை வரவேற்கிறேன். - ரேவதிபிரியா சவுரிபாளையம்'இதை வரவேற்கிறேன்' ஒரு வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் இடம்பெறுவதை தவிர்க்க இந்த பணி நடக்கிறது. தகுதியான வாக்காளர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இதை செய்வதில், எந்த தவறும் இல்லை. தமிழகத்தில் இப்பணி நடப்பதை வரவேற்கிறேன். - ஐ.கணேசன் வக்கீல், காந்திபுரம்'ஓட்டுரிமை பறிபோகலாம்' தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது தவறானது. லட்சக்கணக்கான வாக்காளர்களின் ஓட்டுரிமை பறி போகும் வாய்ப்பு ஏற்படலாம். முன்பே செய்திருக்க வேண்டும். எனவே, தேர்தல் கமிஷன் இதை கைவிட வேண்டும். - ஆர்.ராஜ்குமார் வக்கீல், சிங்காநல்லுார்'பாகுபாடு கூடாது' எவ்வித பாகுபாடுமின்றி நடத்தினால் நலம். கேரளாவில் இருப்பது போல், 15 ஆண்டுகள் தமிழகத்தில் தங்கியவர்களுக்கு மட்டும், இங்கு ஓட்டளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், அனைவருக்கும் ஓட்டு என்றால் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு எழ வாய்ப்புள்ளது. -மாணிக்கம் கருப்பையா டாடாபாத்