மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் அதிருப்தி! விரைவில் ஊதியம் வழங்க வலியுறுத்தல்
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காததால், அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆக., மாதம் 1ம் தேதி முதல், 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, வீடுகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கட்டட எண், சென்சஸ் வீட்டு எண், வீட்டின் தரை, சுவர், கூரைக்கான பிரதான கட்டுமான பொருட்கள், வீடு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது; குடும்ப எண், குடும்ப தலைவரின் பெயர், பாலினம், குடும்பத்தில் வசிப்போர் எண்ணிக்கை, குடிநீர் ஆதாரம், சமையலறை, காஸ் அல்லது மண்ணெண்ணை பயன்பாடு, கழிப்பிடம் குறித்து விபரம், கழிவறை வெளியேற்ற இணைப்பு என, 33 வினாக்கள் கேட்கப்பட்டு, மொபைல் செயலியில் விபரங்களை சேகரிக்கப்பட்டது. மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பணிகளை மேற்கொண்டனர். இதுவரை, அவர்களுக்கு சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கூறியதாவது: கணக்கெடுப்பு பணிக்கான பகுதிகளை கூகுள் மேப் வாயிலாக ஒவ்வொரு கணக்கெடுப்பாளருக்கும் பிரித்து விட்டு, எல்லை வரையறைகளை கூட சரியாக கூறாமல் விட்டனர். கணக்கெடுப்பாளர்கள் தங்களது எல்லைகளை தெரிந்து கொண்டு கணக்கெடுக்கத் தெரிந்து கொண்டு, கணக்கெடுக்க துவங்குவதற்கே ஐந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆக.,30ம் தேதி வரை நேரம் இருந்தும் கண்காணிப்பாளர்கள் வாயிலாக அவசரப்படுத்தி வேலையை செய்தனர். பள்ளி பணிகள் அதிகம் இருந்தாலும், அதையும் கவனித்துக்கொண்டு கணக்கெடுப்பு பணிகளை ஆக., 25ம் தேதிக்குள் முடித்து கொடுக்கப்பட்டது. பயிற்சிக்கு, ஒரு நாளுக்கு, 400 ரூபாய் வீதம், 3 நாட்களுக்கு, 1,200 ரூபாயும்; பணிக்கு, 9,000 ரூபாய் என மொத்தம், 10,200 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், இதுவரை சம்பளம் வழங்கவில்லை. மற்ற மாவட்டங்களில் கடந்த மாதமே இதற்கான ஊதியம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இதற்கான பணிகள் சுணக்கமாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக சம்பளம், புதுடில்லியில் இருந்து சென்னைக்கு வந்து, அந்த அந்த மாவட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன. ‘கோவை மாவட்டத்துக்கும் நிதி முழுமையாக வர வேண்டும். பாதி பேருக்கு சம்பளம் வழங்கி, பாதி பேருக்கு வழங்காவிட்டால் பிரச்னை ஏற்படும். எனவே, முழுமையாக நிதி கோரப்பட்டது. முழு நிதி வந்ததும் விரைவில் வழங்கப்படும்,’ என்றனர்.