நகைக்கு பாலிஷ் போடுவதாக மூதாட்டியிடம் செயின் பறிப்பு
தொண்டாமுத்தூர்; நகை பாலிஷ் போட்டு தருவதாக கூறி, மூதாட்டியிடம், 3 பவுன் செயினை பறித்து தப்பிச்சென்ற வட மாநிலத்தவர் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.நரசீபுரம் அடுத்த விராலியூரை சேர்ந்தவர் பொன்னம்மாள், 70. இவர், நேற்றுமுன்தினம் பகலில், தனது வீட்டின் வாசலில், மரு மகள் கவிதாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வடமாநிலத்தவர் இருவர், சில்வர் பாத்திரங்களுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர்.இதனையடுத்து, பொன்னம்மாள் வீட்டிலிருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து கொடுத்துள்ளார். அதை பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுப்பதற்காக, மருமகள் கவிதா வீட்டிற்குள்ளே சென்றுள்ளார்.அப்போது, வட மாநிலத்தவர், பொன்னம்மாளிடம், இதேபோல, உங்களின் தங்க செயினுக்கும் பாலிஷ் போட்டு தருகிறோம் எனக்கூறியுள்ளனர். இதனை நம்பி, பொன்னம்மாள் தனது கழுத்தில் இருந்த, 3 பவுன் தங்க செயினை கழற்றிக்கொடுத்தார். அதை வாங்கியவுடன், வடமாநிலத்தவர் இருவரும், அங்கிருந்து செயினுடன், பைக்கை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். பொன்னம்மாளின் கூச்சல் கேட்டு அனைவரும் வருவதற்குள், மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து, ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.