உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்மொழி படிக்கும் வெளிமாநில குழந்தைகள்

தமிழ்மொழி படிக்கும் வெளிமாநில குழந்தைகள்

வால்பாறை; வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில், வெளிமாநில குழந்தைகள் ஆர்வத்துடன் தமிழ்மொழி கற்கின்றனர்.வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், அசாம், ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்துள்ளனர்.இவர்களின் குழந்தைகள் அந்தந்த எஸ்டேட் பகுதியில் உள்ள, அங்கன்வாடி மற்றும் அரசு துவக்கப்பள்ளிகளில் தமிழ்மொழியில் கல்வி பயின்று வருகின்றனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறையில், 43 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த கல்வியாண்டில் இது வரை, 855 குழந்தைகள் அங்கன்வாடியில் சேர்ந்து ஆரம்ப கல்வி கற்கின்றனர்.இதில், 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிமாநிலத்தினர். இந்த குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள், தமிழ்மொழியில் கல்வி கற்பிக்கின்றனர். குழந்தைகளும் தமிழ்மொழியில் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர்.அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:வால்பாறை தாலுகாவில் நல்லகாத்து, புதுத்தோட்டம், ஸ்டேன்மோர், சிறுகுன்றா, மாணிக்கா, ேஷக்கல்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில், வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் ஆரம்ப கல்வி கற்கின்றனர்.இவர்களுக்கு ஹிந்தியிலும், சைகை வாயிலாகவும் கல்வி கற்றுத்தரப்படுகிறது. இது தவிர அங்கன்வாடி குழந்தைகளுக்கு, ஆடல், பாடல் வாயிலாக எளிய முறையில் தமிழ் கற்றுத்தருவதால், ஆர்வத்துடன் கல்வி பயில்கின்றனர்.இவ்வாறு, கூறினர்.

ஹிந்தியும் அவசியமுங்க!

வால்பாறையில் உள்ள, 40க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் உள்ளனர்.அவர்களின் குழந்தைகள் அருகில் உள்ள அங்கன்வாடி மற்றும் துவக்கபள்ளிகளில் தமிழ்மொழியில் கல்வி கற்கின்றனர். அவர்களை திறம்பட படிக்க வைக்க, அங்கன்வாடி பணியாளர்கள், துவக்கப்பள்ளி ஆசிரியர்களும் அவசியம் ஹிந்தி படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ