ஏமாற்றிய கோவை குற்றாலம் ஆறுதல் அளிக்கிறது சின்னாறு
தொண்டாமுத்தூர்: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், சாடிவயல் சின்னாற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.கோவை மேற்கு தொடர்ச்சிமலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அடர் வனப்பகுதியின் உள்ளே உள்ள இந்த நீர்வீழ்ச்சியில், வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.தற்போது கோடை விடுமுறை என்பதால், தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனையடுத்து, கோவை குற்றாலத்தில், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். நேற்று, காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன், கோவை குற்றாலத்திற்கு வந்தனர். ஆனால், வெள்ளப்பெருக்கால் தடை விதிக்கப்பட்டு இருந்ததால், சாடிவயல் சோதனை சாவடியிலேயே, சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.தொலை தூரத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, சாடிவயல் சோதனை சாவடி முன் உள்ள சின்னாற்றிலும் நீர்வரத்து இருந்ததால், அதில், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.