வேளாண் பல்கலை வளாகத்தில் சினிமா ஷூட்டிங்; வருவாயை மேம்பாட்டு பணிக்கு செலவிட திட்டம்
கோவை ; கோவை வேளாண் பல்கலை வளாகத்தில், சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாகக் கிடைக்கும் வருவாயை உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்குச் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.கோவை வேளாண் பல்கலை வளாகம் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இவ்வளாகத்தில் 1909ம் கட்டி முடிக்கப்பட்ட, இந்தோ சராசெனிக் கட்டடக்கலை கட்டடங்கள் புகழ்பெற்றவை. இந்தக் கட்டடங்களுக்காகவே, ஏராளமான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்றுள்ளன.இந்நிலையில், மாதவன், யோகிபாபு ஆகியோரின் நடிப்பில் உருவாகும் திரைப்படம், சூர்யா நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஆகிய இரு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் வரும் வாரங்களில் துவங்க உள்ளது.பல்கலையின் பிரதான கட்டட முகப்பில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் கேட்டபோது, “இதற்கு முன்பும் இங்கு படப்பிடிப்புகள் நடந்துள்ளன. வளாகத்தில் எவ்வித சேதமோ, இடையூறோ இன்றி படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் வருவாயை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, பல்கலையில் உள்ள விளையாட்டு மைதானங்கள் 2,000 மாணவர்களுக்கானவை. தற்போது வளாகத்தில் 5,000 மாணவர்கள் உள்ளனர். எனவே, மைதானத்தை விரிவுபடுத்துவது உட்பட இதர கட்டமைப்புகளை மேம்படுத்த இந்த வருவாயைப் பயன்படுத்திக் கொள்ள பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது” என்றார்.