உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்...

--கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் நேற்று முன்தினம் ராஜவீதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கார் பாக்கிங்கில் சந்தேகத்தின்படி, நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கோவை உப்பார வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 42, பொன்னுசாமி லே- அவுட்டை சேர்ந்த தனசேகர், 34, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா, 3 மொபைல் போன் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். அதேபோல், துடியலுாரில் கஞ்சா விற்ற ராக்கிபாளையம் பிரிவை சேர்ந்த முகமத் ஜாசீம், 18, மற்றும் கார்த்திக் ராஜ், 27 ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரிடம் இருந்து, 110 கிராம் கஞ்சா, 2 மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

முதியவரிடம் நகை பறிப்பு

கோவை குனியமுத்துார் முத்துசாமி சேர்வை வீதியை சேர்ந்தவர் பூபதி, 71; தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் உக்கடம் லாரிப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில், பென்சன் தொகை வாங்க சென்றார். இவருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த ஒரு வாலிபர், 'கையில் மோதிரத்துடன் சென்றால், பென்சன் தொகை தரமாட்டார்கள். அதனை கழட்டி என்னிடம் கொடுங்கள். திரும்பி வந்ததும் தந்து விடுகிறேன்' என தெரிவித்தார். இதை நம்பி பூபதி தான் கையில் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரத்தை கழற்றி அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த வாலிபரை காணவில்லை. கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வாலிபரை தேடிவருகின்றனர்.

சிகரெட் விற்ற, புகைத்த 8 பேர் கைது

கோவை ரயில்வே ஸ்டேஷன், பி.பி.எல்., கார்னர், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் கடைகளில் அனுமதியின்றி சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட ஷேக் முகமது யூசப், 38, தொண்டி, 24, திருப்பதி, 24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 பாக்கெட் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.அதேபோல மேட்டுப்பாளையம் ரோடு என்.எஸ்.ஆர்., ரோடு, இடையர்பாளையம், லட்சுமி மில்ஸ் பகுதியில் பொது இடத்தில் சிகரெட் புகைத்து, அசுத்தமாக எச்சில் துப்பி கொண்டு இருந்த சுனில், 54, ஹரிதாஸ், 60, ரவிக்குமார், 43, கார்த்திக், 36, ராமகிருஷ்ணன், 64 ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை