சிட்டி கிரைம்
கோர்ட்டுக்கு வந்த முதியவரிடம் பிக்பாக்கெட்
சூலுார், செலக்கரிசல், மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 80. இவர் வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் செலக்கரிசல் பகுதியில் இருந்து கோவைக்கு பஸ்ஸில் புறப்பட்டார். கோர்ட் அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது தனது பேண்ட் பாக்கெட் கிழிந்திருந்தது. அதிலிருந்த, ரூ. 15 ஆயிரம் காணாமல் போனது தெரிந்தது. சம்பவம் குறித்து கிருஷ்ணசாமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிக் பாக்கெட் அடித்த நபரை தேடி வருகின்றனர். நடந்து சென்றவரிடம் வழிப்பறி
உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சீத்தாராம், 44. இவர் வீரியம்பாளையம் பகுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி சீத்தாராம் தனது நண்பருடன் காளப்பட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சீத்தாராம் கழுத்தில் இருந்த செயின், கையில் இருந்த மொபைல் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து, சீத்தாராம் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தொடர் திருட்டு; சிறுவன் உட்பட இருவர் கைது
கடந்த, நான்கு நாட்களுக்கு முன்பு, தொண்டாமுத்தூர் வரதராஜபுரத்தில் உள்ள, ராஜலட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் வீடுகளில், அடுத்தடுத்து, 1¼ பவுன் நகை மற்றும் 8000 ரூபாய் பணம் திருடு போனது. இதுகுறித்து, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் அப்பகுதிகளில் நடமாடி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது, அசாம் மாநிலத்தை சேர்ந்த அலபின் உசேன், 33 மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் ஆறுமுக கவுண்டனூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததும், போதை பொருட்கள் பயன்படுத்த பணம் இல்லாததால், பூட்டியிருந்த வீடு கடைகளை நோட்டமிட்டு, இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, தொண்டாமுத்தூர் போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 1¼ பவுன் நகை மற்றும் 8,000 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.