சிட்டி கிரைம்
மூதாட்டியின் செயின் பறிப்பு
சிங்காநல்லுார், பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பானுமதி, 65. இவர் கடந்த 18ம் தேதி காலை நடைபயிற்சிக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது, பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர், மூதாட்டியின் நான்கு சவரன் செயினை பறித்துச் சென்றனர். மூதாட்டியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், இருவரும் பைக்கில் தப்பினர். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கஞ்சா விற்றவர்கள் கைது
உக்கடம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏழாவது பிளாக் அருகில் இருந்த மூவரிடம் விசாரித்தனர். அவர்களின் பதில் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததால், அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கவர்கள் இருந்தன. கஞ்சா வைத்திருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த காஜா உசைன், 26, கமலேஸ்வரன், 24 மற்றும் அபுதாகிர், 25 ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா விற்றவருக்கு சிறை
தடாகம் ரோடு, கோவில் மேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது, சாஸ்திரி ரோடு சந்திப்பில் சீனிவாசன், 50 என்பவர் குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த குட்கா பொருட்களை, பறிமுதல் செய்தனர்.