உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

குட்கா விற்றவருக்கு சிறை

ரத்தினபுரி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கண்ணுசாமி கவுண்டர் வீதியில் முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான இடத்தில், சுமார் 60 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சூதாட்டம்; 9 பேர் கைது

ராமநாதபுரம் பகுதியில் சிலர் பணம் வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அம்மன் குளம், ராஜீவ் காந்தி நகரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 9 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட தினேஷ் குமார், 36, ராஜன், 38, முத்துக்குமார், 32, தேவராஜ், 50, நவநீத கிருஷ்ணன்,37, சரவணகுமார், 36, பிரவீன், 21, அருள், 28 மற்றும் கோகுல், 25 ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.9,910, சீட்டு கட்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

பணம் பறிப்பு; வாலிபர் கைது

கோவை சரவணம்பட்டி விஸ்வாசபுரம் கார்த்திக் நகரை சேர்ந்தவர் சங்கர், 45. பழக்கடை நடத்தி வருகிறார். சங்கர் சரவணம்பட்டி மருதம் நகர் ஜங்சன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருக்கு தெரிந்த, மணியகாரம்பாளையம் ரங்கநாதர் தெருவை சேர்ந்த சுரேஷ், 47 என்பவர் வந்தார். அவசரமாக ரூ.1 லட்சம் தேவைப்படுவதாக கூறினார். தன்னிடம் பணம் இல்லை என சங்கர் தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி, சங்கரிடம் இருந்த ரூ.500 ஐ பறித்து தப்பினார். சங்கர் புகாரின் பேரில், வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் சுரேஷை சிறையில் அடைத்தனர்.

வழிப்பறி வாலிபருக்கு சிறை

தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுாரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டுக்கு கடந்த 17ம் தேதி சென்றார். அப்போது அங்கு வந்த வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், 21 என்பவர் மது குடிக்க பணம் கேட்டு, செந்தில் குமாரை மிரட்டினார். பணம் கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டினார். செந்தில் குமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரிஹரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோபுரத்தில் இருந்து விழுந்து பலி

பி.என்.பாளையம், அருந்ததியர் வீதியில் பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கோபுரத்தில், நேற்று முன்தினம் மதியம், மன நலம் பாதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அப்பகுதியினர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச்சென்றனர். பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து, காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

லாரி மோதி பலி

பீளமேடு, காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 34. இவர் கணபதி எப்.சி.ஐ., ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாடின்றி, கண்ணன் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. கீழே விழுந்த கண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முதியவரை தாக்கிய போதை ஆசாமி கைது

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் மொய்தீன், 65. கிடைக்கும் கூலி வேலைகளை செய்து, சாலையோரம் உள்ள கடைகள் முன் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம், உக்கடம் சி.எம்.சி., காலனி பூமாரியம்மன் கோவில் பின்புறம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் போதையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கீழே கிடந்த சிமென்ட் சிலாப்பை தூக்கி மொய்தீனின் காலில் போட்டார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, தெற்கு உக்கடத்தை சேர்ந்த ராஜேஷ், 40 என்பவரை சிறையில் அடைத்தனர்.

ஆட்டோ டிரைவரிடம் திருட்டு

கோவை, மேட்டுப்பாளையம் ரோடு காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஷாஜகான், 52; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் அவர், ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர், ஆட்டோவில் வைத்திருந்த ஷாஜகானின் மொபைல்போனை திருடி தப்பிக்க முயன்றனர். ஷாஜகான் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை, பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் மொபைல்போன் திருடிய, செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த அஜித்குமார், 25, கெம்பட்டி காலனியை சேர்ந்த கார்த்தி, 24, மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த நாகராஜ், 27 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ