உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் கோவை_சிட்டி

சிட்டி கிரைம் கோவை_சிட்டி

மொபைல் பறித்தவர் கைது

திருவாரூரை சேர்ந்தவர் கார்த்தி, 33; பாலக்காட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி மாலை கோவை வந்த அவர், பெரிய கடைவீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். கடையின் படியில் உட்கார்ந்திருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர், கார்த்தி பாக்கெட்டில் வைத்திருந்த மொபைலை பறித்து விட்டு ஓடினார்.கார்த்தி, பொதுமக்களின் உதவியுடன் மொபைலை திருடிய நபரை துரத்தி பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்ததில், மொபைல் திருடிய நபர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ், 30 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குட்கா விற்றவருக்கு சிறை

மாநகர பகுதிகளில், குட்கா விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த, போலீசார் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம், வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ராஜவீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குட்கா விற்ற ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஹசீம், 25 என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்றவர் கைது

துடியலுார் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், துடியலுார் போலீசார் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, வாலிபரிடம் விசாரித்தனர்.அவர், அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 28 என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சா, ஜிப் லாக் கவர்கள் ஐந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மது விற்றவருக்கு சிறை

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு, காந்திபார்க் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து கொண்டிருந்தது. மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன், 44 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 107 மது பாட்டில்கள், ரூ. 11,450 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் கண்ணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி