உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்

கோவை சின்னமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அருண், 38; மாற்றுத்திறனாளி. சில தினங்களுக்கு முன் நண்பர் ஸ்ரீதருடன் மது அருந்தி விட்டு, ஓம் சக்தி நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் அருணிடம் தீப்பெட்டி கேட்டனர். இல்லை எனத் தெரிவித்த அருணை, ஐந்து பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். அருணுக்கு இரு கண்களிலும் காயம் ஏற்பட்டது. அருணின் ஸ்கூட்டரில் இருந்த மொபைல்போனை பறித்துக் கொண்டனர். பர்சில் இருந்து ரூ.2,500ஐ பறித்து தப்பினர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கல்லுாரி மாணவருக்கு கத்திக்குத்து

சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்தவர் சூர்யா, 20. மூன்றாம் ஆண்டு கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம் சிவானந்தபுரம் விநாயகர் கோவில் முன், நண்பர் சஞ்சய் உடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கால்டாக்ஸியில் வந்த ஐந்து பேர், தங்களது காரில் ஏன் மோதினாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். சூர்யாவை கத்தியால் குத்த முயன்றனர். கத்தி கைநழுவியதில் சூர்யாவின் காதை வெட்டியது. மற்றொருவர் சூர்யாவை கத்தியால் குத்த முயன்றார். தப்ப முயன்ற சூர்யா, தடுக்கி விழுந்தார். காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சூர்யா, அவரது நண்பர் சஞ்சய் கூச்சலிட்டனர். ஐந்து பேரில் ஒருவர், சூர்யாவின் பைக் சாவியை பிடுங்கி பைக்குடன் தப்பினார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஸ்கூட்டரை திருட முயற்சி

தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் முகமது ரபி, 58. நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு நடைபயிற்சிக்கு சென்றார். திரும்பி வந்த போது, மர்மநபர் ஒருவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை முகமது ரபி பிடித்து, கடைவீதி போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் கோவை புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நவ்ஷத், 26 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

சங்கனுார் தில்லை நகரை சேர்ந்தவர் மார்ட்டின் பிரபு, 34; ஏ.சி., மெக்கானிக். நேற்று முன்தினம், நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் ஏ.சி., சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்பனை; ஒருவர் கைது

ராமநாதபுரம் போலீசார், சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. போலீசார் சோதனை நடத்தினர். அவரிடம் கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர் கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த கமேஷ்வரன், 25 என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தியதும் தெரிந்தது. கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை