உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு: வீட்டுக்குள் பொங்கி வந்தது கழிவு நீர்

பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு: வீட்டுக்குள் பொங்கி வந்தது கழிவு நீர்

கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு, அன்னை இந்திரா நகர் நான்காவது வீதியில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வீட்டுக்குள் பொங்கியதால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, குறிச்சி, குனியமுத்துார் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. குறிச்சி பகுதியில் வீட்டு இணைப்பு வழங்கப்பட்டு, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் கட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது.குனியமுத்துார் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரை, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் வழியாக கொண்டு செல்ல வேண்டும். தண்டவாளத்தை கடந்து செல்ல குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.இத்திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை அடிப்படையில் குழாய் பதித்து வருவதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், சில இடங்களில் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், கழிவு நீர் 'ரிவர்ஸாகி', வீட்டுக்குள் திரும்புகிறது.அச்சமயங்களில் வீடு முழுவதும் கழிவு நீர் பரவி, துர்நாற்றம் வீசுகிறது. சேம்பர் கட்டியுள்ள பகுதியில் அடைப்பு ஏற்பட்டாலும், வீடு வரை துர்நாற்றம் வருகிறது.மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு அன்னை இந்திரா நகர் நான்காவது தெருவில் உள்ள வீட்டுக்கு கொடுத்துள்ள இணைப்பில், நேற்று அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் பொங்கியுள்ளது. அதனால், அவ்வீட்டில் வசிப்பவர்கள் சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாகியுள்ளனர்.பாதாள சாக்கடை இணைப்பு பெற்றவர்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க ஏற்கனவே பணம் பெற்றுள்ளனர். இப்போது, மாநகராட்சியில் இருந்து வைப்புத்தொகை செலுத்தச் சொல்லி நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, ஆறு மாதத்துக்கு ஒருமுறை சேவை கட்டணம் செலுத்தச் சொல்கின்றனர். வீட்டுக்கு வீடு பாதாள சாக்கடை கட்டணம் மாறுபடுகிறது' என்றனர்.

'கிராவிட்டி' முறையில் பாதாள சாக்கடை இணைப்பு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் கேட்ட போது, 'கிராவிட்டி முறையில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கியுள்ளோம். குறிச்சி பகுதியில், 7,800 இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. நாப்கின் உள்ளிட்ட கழிவுகளால் அடைப்பு ஏற்படுவதால், இதுபோன்ற பிரச்னை வருகிறது. வீட்டுக்குள் சேம்பரை திறந்து பார்த்து, அடைப்பை நீக்கினால் போதும். இதுபோன்ற புகார் இதுவரை வரவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !