உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்புகள்; பிளாஸ்டிக் கழிவுகளால் விபரீதம்

பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்புகள்; பிளாஸ்டிக் கழிவுகளால் விபரீதம்

பொள்ளாச்சி; பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை போடக்கூடாது, என, நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், 170.22 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7,400 பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆள் இறங்கும் குழிகளில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் அதிகளவு பொங்கி வெளியேறுகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு நகராட்சி கமிஷனர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். நகராட்சி கமிஷனர் குமரன் கூறியதாவது: நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பாகவும், நல்ல முறையில் செயல்படுத்த அனைவரது ஒத்துழைப்பு அவசியமாகும். பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் பொங்கி தெருவில் செல்வதால் பொதுச்சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வீடுகளில் உள்ள கழிப்பிடங்களில் பிளாஸ்டிக் பைகள், பேம்பர்ஸ், நாப்கின் போன்றவை வெளியேற்றப்படுகின்றன. இதனால், ஆள் இறங்கும் குழிகளில் அடைப்பு ஏற்படுகின்றன. வீடுகளில் கழிப்பிடங்கள் வாயிலாக எந்த ஒரு மக்கும், மக்காத கழிவுகளை வெளியேற்ற கூடாது. உணவு, வணிக நிறுவனங்களில் இருந்து பாதாள சாக்கடையில் சமையல் கழிவுகள் வெளியேற்றுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். கழிவுகள் வெளியேறும் பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்து குறைபாடு கண்டறியப்பட்டால், பொது சுகாதார விதிகளின் படி, அபராதம் விதிப்பு, கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வீடுகள் தோறும் குப்பைகள் தரம் பிரித்து வழங்கி எழிலான பொள்ளாச்சியை உருவாக்குவோம். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை