உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி சீசனில் தேங்காய் விலை உயர வாய்ப்பு தென்னை விவசாயிகள் நம்பிக்கை

தீபாவளி சீசனில் தேங்காய் விலை உயர வாய்ப்பு தென்னை விவசாயிகள் நம்பிக்கை

பொள்ளாச்சி:தேங்காய் வரத்து குறைந்துள்ளதாலும், தீபாவளி மற்றும் பண்டிகை நாட்கள் தொடர்ந்து வருவதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என, விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, நோய் தாக்குதல், வெள்ளை ஈ போன்ற காரணங்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தேங்காய் விளைச்சல் பாதித்துள்ளது. கொப்பரை உற்பத்திக்கு தேங்காய் கிடைக்காததால், கொப்பரை கிடங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தற்போது, வடமாநிலங்களில் தசரா சீசன், தமிழகத்தில் நவராத்திரி காலத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவியது. தீபாவளி, கார்த்திகை பண்டிகை நாட்கள் வருவதால் தேங்காய் தேவை மேலும் அதிகரிக்கும். வரத்து குறைந்துள்ளதால் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, நேற்று முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ 222 ரூபாய், இரண்டாம் தர கொப்பரை 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கறுப்பு தேங்காய் டன் 70,000 ரூபாய், இளம் தேங்காய் 66,000 ரூபாய்க்கு விற்றது. ஒரு கிலோ தேங்காய் பவுடர், 290 ரூபாய், தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 4,750 ரூபாய்க்கும் விற்றது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறுகையில், 'தேங்காய்க்கு விலை கிடைத்து வருவதால், விவசாயிகளிடையே மகிழ்ச்சி காணப்படுகிறது. கேரளாவில், ஜன., பிப்., மார்ச் போன்ற மாதங்களும்; தமிழகத்தில், மார்ச், ஏப்., மே போன்ற மாதங்களும்; கர்நாடகாவில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களும் தேங்காய் சீசனாக உள்ளது. இந்த மாதங்களில்,தேங்காய் மற்றும் கொப்பரை அதிகளவு மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது, சீசன் இல்லாத நேரத்தில் மார்க்கெட்டிற்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், கொப்பரை மற்றும் தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இளநீருக்கும் நல்ல விலை கிடைப்பதால் பலரும் இளநீராக அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர். இதனால், தேங்காய் வரத்து குறைந்து வருகிறது. தீபாவளி சீசனில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை