பருவ நிலை மாற்றத்துக்கு கைகொடுக்கும் தென்னை நார்! தேசிய காயர் கூட்டமைப்பு தலைவர் தகவல்
பொள்ளாச்சி: 'தென்னை நார் பொருட்களை பயன்படுத்துவதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைவதுடன், மரங்களை பாதுகாத்து, தண்ணீர் சிக்கனம் மேற்கொள்ள முடியும்,'' என, தேசிய காயர் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் தெரிவித்தார்.இந்தியாவில், 14 மாநிலங்களில், 23 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளில், 11 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார்உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், ஒன்பதரை லட்சம் மெட்ரிக் டன் மூலப்பொருட்களாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது, மத்திய அரசின் கூட்டுக்குழுமங்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இது பருவநிலை மாற்றத்தில் பெரும் பங்கு தென்னை நார் வகிக்க வாய்ப்பினை ஏற்படுத்துகிறது.தேசிய காயர் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதால் கிலோ, 45 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்க முடியும். அதில், சுவாமி படங்கள், பிரதமர் மோடி படங்கள் தென்னை நாரில் தயாரிக்கப்பட்டுள்ளன.பிரதமர் மோடி புகைப்படத்தை உற்பத்தி செய்ய, 12 கிலோ மரம், 1,300 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், தென்னை நாரின் வாயிலாக தயாரிப்பதால், மரம் வெட்டுவது தடுக்கப்படுகிறது, தண்ணீர் உபயோகமும் இல்லை.இது போன்று, வீடுகளில், வண்ணம் பூசுவதற்கு பதிலாக, பிடித்த இயற்கை காட்சிகளை தென்னை நாரில் தயாரித்து உபயோகப்படுத்தலாம். தென்னை நாரின் அறிவியல் ஆய்வின்படி, குளிர்காலத்தில் வெப்பமும், வெப்ப காலத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ணம் கொடுக்கும் வேதியியல் குணமும் உள்ளது.வீடுகளில், 24 வகையான தென்னை நார் பொருட்களை பயன்படுத்துவதால், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம். விவசாயத்தில் தென்னை நார் துகளை பயன்படுத்துவதால், 70 - 80 சதவீதம்தண்ணீர் சேமிக்கலாம். பருவ நிலை மாற்றத்துக்கு தென்னை நார் பொருட்கள் கைகொடுக்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.