உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோப்புகளில் தேங்காய் திருட்டு அமோகம்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

தோப்புகளில் தேங்காய் திருட்டு அமோகம்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம். இங்கிருந்து, தேங்காய், கொப்பரை போன்றவை மாநிலம் முழுவதும், வடமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தேங்காய் விளைச்சல் பாதிப்பால், தற்போது ஒரு கிலோ தேங்காய் 68 ரூபாய் வரையிலும் தோப்புகளில் கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதிக விலை கிடைப்பதால், தோப்புகளில் தேங்காய் திருட்டு அதிகரித்துள்ளதாக, நேற்று பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் பேசியதாவது: தென்னந்தோப்புகளை பகல் நேரத்தில் நோட்டமிடும் நபர்கள், இரவு நேரங்களில் 50, 100 தேங்காய்களை திருடி தலைச்சுமையாக கொண்டு செல்கின்றனர். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு திருட்டு நடக்கின்றன. திருடி செல்லும் தேங்காயை கடைகளில் விற்று, அதில் கிடைக்கும் பணத்தை ஜாலியாக செலவு செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், தேங்காய் திருடிய நபர்களை பிடித்து விசாரித்தோம். அவர்கள், விற்பனை செய்த கடையை காண்பித்தனர். அங்கு, 100 விவசாயிகள் சென்று முற்றுகையிட்டு போராடினோம். அந்த கடைக்காரரும், 'இனிமேல் திருட்டு தேங்காய் வாங்க மாட்டேன்' என, உறுதியளித்தார். இது குறித்து, போலீசாரிடம் புகார் கொடுத்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தென்னையில், நோய் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நிலையில், விலை உயர்வு மன ஆறுதல் தந்தது. ஆனால், தற்போது நடக்கும் தேங்காய் திருட்டு வேதனையளிக்கிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பேசினார். சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி பேசுகையில், ''விவசாயிகள் சங்கத்தினர், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தேங்காய் திருடும் நபர்களிடம் கடைக்காரர்கள் தேங்காய் வாங்க வேண்டாம். விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். விவசாயிகளுடன் ஆலோசித்து அரசு சார்பில் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி