கோவை வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழா: கவர்னர் பங்கேற்பு; அமைச்சர் புறக்கணிப்பு
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் 44வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கவர்னர் ரவி தலைமையில் நடந்த இந்த விழாவில், வேளாண்மைத்துறை அமைச்சரும், பல்கலை இணை வேந்தருமான பன்னீர் செல்வம் பங்கேற்காமல் புறக்கணித்தார். துணை வேந்தர் கீதாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி, 353 முனைவர் பட்டங்கள் உட்பட 9526 பேருக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தவில்லை.மத்திய பயிர் பாதுகாப்பு மற்றும் உழவர் நல ஆணைய தலைவர் திரிலோசன் மகாபாத்ரா பேசுகையில், ''வரும் 2024ல் உலகின் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய வேளாண்துறையில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும். 2024ல் 439 மில்லியன் டன் உணவு இந்தியாவுக்கு தேவைப்படும். இந்த இலக்கை எட்ட உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு வேளாண்துறையில் டிஜிட்டல் மாயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன'' என்றார்.