உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு அக்கறை இல்லை! ஏலத்தொகை, குத்தகை வசூல் ரூ.59.99 கோடி நிலுவை

கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு அக்கறை இல்லை! ஏலத்தொகை, குத்தகை வசூல் ரூ.59.99 கோடி நிலுவை

கோவை : கோவை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்க காட்டும் முனைப்பு மற்றும் அக்கறையை, குத்தகை இனங்கள் மற்றும் ஏலத்தொகையை வசூலிப்பதில் காட்டுவதில்லை. அதனால், 59.99 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையாய் இருக்கிறது.கோவை மாநகராட்சி, 2024-25 நிதியாண்டில், 468.37 கோடி ரூபாய் சொத்து வரி வசூலித்திருக்கிறது. அதேபோல், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பஸ் ஸ்டாண்ட்டுகளில் நுழைவு கட்டணம், ஆடு, மாடு அறுவை கூடம், கட்டண கழிப்பறை, மார்க்கெட்டுகளில் சுங்கம் வசூலிப்பது, வாரச்சந்தையில் சுங்கம் வசூலிப்பது, வ.உ.சி., மைதானம் பராமரிப்பது உள்ளிட்டவை குத்தகை மற்றும் ஏல வகைகளில் சேர்க்கப்பட்டு, வருவாய் ஈட்டப்படும்.

கோடிகளில் நிலுவை

இவ்வகையில், 2024-25 நிதியாண்டில் ரூ.26.77 கோடி, 2023-24ல் நிலுவை ரூ.54.62 கோடி என ரூ.81.39 கோடி வசூலிக்க வேண்டியிருந்தது. இதில், 21.40 கோடி ரூபாயே வசூலாகி உள்ளது. இன்னும், 59.99 கோடி கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையாகி உள்ளது.2023-24 நிதியாண்டு கணக்கில், 50.79 கோடி வசூலிக்காமல் இருப்பதால், நீண்ட நாட்களாக குத்தகை செலுத்தாமல் இருப்பவர்கள் பட்டியல் எடுத்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம், மாநகராட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.மாநகராட்சி பகுதியில், 3.17 லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 98.60 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும்; 61.48 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது.ஆனால், 1.14 லட்சம் கட்டடங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு, கேட்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது; 141.74 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். 36.10 லட்சம் ரூபாயே வசூலானது. இன்னும், 141.38 கோடி ரூபாய் நிலுவையாக இருக்கிறது.

குப்பை வரி வசூல்

குப்பை வரியாக, ரூ.5.76 லட்சம் கட்டடங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வகையில், 39.33 கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அதில், 32.55 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரியோடு சேர்த்து, குப்பை வரியும் வசூலிப்பதால், அதிக தொகை வசூலாகியிருக்கிறது.

அரசு கட்டடங்கள் எவை

மாநகராட்சி பகுதியில், 9,136 அரசு கட்டடங்கள் உள்ளன. இவற்றுக்கும் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு, அந்தந்த துறை அலுவலகங்கள் வாயிலாக, வசூலிக்கப்படுகிறது. மொத்தம், 26.42 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியிருந்தது; 15.34 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டது. இன்னும், 11.08 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது. எந்தந்த அரசு அலுவலகங்கள் சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கின்றன என்கிற பட்டியலை, மாநகராட்சி வெளியிடுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !