கோவை குற்றாலத்துக்கு பூட்டு சம்பளமின்றி ஊழியர்கள் பாதிப்பு
தொண்டாமுத்தூர் : கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந் துள்ளது. இது, போளுவாம்பட்டி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது, பார்க்கிங் பாதுகாப்பு, சுற்றுலா பயணிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை செய்வது, நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது போன்ற பணிகளில், 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த மாதம், 25ம் தேதி முதல், சுற்றுலா பயணிகள் செல்ல, வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து மழை பெய்வதால், தற்போதும் தடை நீடித்து வருகிறது. இதனால் சூழல் சுற்றுலா பணியாளர்களுக்கும் தற்போது வேலை இல்லை. சுமார், 10 பேர் மட்டும், தூய்மை பணி செய்து வருகின்றனர். மீதமுள்ள 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள், பணியின்றி உள்ளனர். இந்த மாதம் முழுவதும் பணியில்லாததால், சம்பளமும் கிடைக்காது.இதனால், இந்த மாதம் தங்களின் குடும்ப செலவுகளுக்கும் கூட சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.