தேசிய ரேபிட் செஸ் போட்டி தங்கம் வென்ற கோவை வீரர்
கோவை : ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான 'ரேபிட்' செஸ் போட்டியில், கோவை வீரர் தங்கம் வென்று, பெருமை சேர்த்துள்ளார்.ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் கடந்த, 20 முதல் 22ம் தேதி வரை தேசிய ரேபிட் செஸ் போட்டி நடந்தது. 26 மாநிலங்களை சேர்ந்த, 308 வீரர்கள் பங்கேற்றனர்.11 கிராண்ட் மாஸ்டர்கள், 24 இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 11 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், ஏழு சுற்றுகளில் வெற்றி, நான்கு டிரா என, 9 புள்ளிகளுடன் கோவையை சேர்ந்த வீரர் இனியன், முதல் இடத்தை சமன் செய்தார்.மற்றொரு தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ், ரயில்வே வீரர்களான கிராண்ட் மாஸ்டர் ஷியாம் நிகில், கிராண்ட் மாஸ்டர் திப்தயான் கோஷ் ஆகியோர், 9 புள்ளிகள் பெற்றனர்.தொடர்ந்து, டை பிரேக் முறையில் தமிழக வீரர் இனியன், முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். பிரனேஷ் வெள்ளி மற்றும் ஷியாம் நிகில் வெண்கலமும் வென்றனர்.இந்தாண்டில் மட்டும் மூன்று சர்வதேச போட்டிகளிலும், ஒரு தேசிய அளவிலான போட்டியிலும் என, நான்கு போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் இனியன் முதல் பரிசை தட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.