வாசகர்கள் கருத்துகள் ( 1 )
How to Join the movement
கோவை; கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின், குளங்கள் பராமரிப்பு மற்றும் சேவைப் பணி, 400வது வாரம் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. கோவையை சேர்ந்த மணிகண்டன், இங்கிருக்கும் குளங்களை சீரமைத்து, மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆவலில், 2017 பிப்., மாதம் தன்னார்வலர்களுக்கு அழைத்து விடுத்தார். பலர் கைகொடுக்க, பேரூர் பெரியகுளத்தில் பணிகள் துவங்கின. ஒரு மாதத்தில் இக்குளம் சுத்தப்படுத்தப்பட்டு, 2 டன் பிளாஸ்டிக் அகற்றப்பட்டன. இவர்களின் சேவை அறிந்து, வெளிநாடுகளில் இருக்கும் பலர், இப்பணிக்கு தேவையான பொருளாதார உதவி செய்துள்ளனர். பின், செங்குளம், செல்வசிந்தாமணி குளம் ஆகியவற்றில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மார்ச் மாதம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, வார இறுதி நாட்களில் பணி மேற்கொள்ள துவங்கினர். உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் என பணிகள் விரிவடைந்தன. இதுகுறித்து, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது:தன்னார்வலர்கள் உதவியுடன், வாரத்தின் இறுதி நாட்களில், குளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்கிறோம். இதில் வெள்ளலுார் குளம் சீரமைத்தது சவாலான காரியமாக இருந்தது. 12 ஆண்டுகளுக்கு முன் வரை, இக்குளத்துக்கு நீர் வராமல் இருந்தது. வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அப்போதைய கலெக்டர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, 2018ல் குளத்துக்கு நீர் வரத் துவங்கியது. பேரூர் பெரிகுளக்கரையில், 7,500, காட்டம்பட்டி குளக்கரையில் 4,500 என, பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நடவு செய்யப்பட்டன. இதுபோன்ற குளங்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பனை விதைகள் நட்டு மரங்களாக வளர்ந்துள்ளன. தற்போது, 401வது வாரமாக களப்பணி நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
How to Join the movement