வால்பாறை: வால்பாறையில், ஆய்வுக்காக சென்ற கோவை மாவட்ட கலெக்டர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி, கேள்வி கேட்டு, பரிசு வழங்கினார்.வால்பாறையில் தமிழக அரசின், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கலெக்டர் தலைமையில், சப்-கலெக்டர், அரசு துறை அதிகாரிகள் வால்பாறையில் பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மார்க்கெட் பகுதியில் செயல்படும் அம்மா உணவத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.அப்போது, காலையில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்து பாராட்டினார். வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றார்.அப்போது, பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களின் இயற்பியல் பாடப்புத்தகத்தை பெற்று, 'எலக்ட்ரிசிட்டி' பாடம் நடத்தினார். அதன்பின், மாணவ, மாணவியரிடம் கேள்வி கேட்டு, சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு, திருக்குறள் புத்தங்களை பரிசாக வழங்கினார். கலெக்டர் பேசும் போது, 'மாணவர்கள் நன்றாக படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டும். பொதுத்தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்ள வேண்டும்,' என்றார். கலெக்டரே பாடம் நடத்தி, கேள்வி கேட்டு பரிசு வழங்கியதால், மாணவர்கள் உற்சாக மடைந்தனர்.
டாக்டர் இல்லாததால் சிக்கல்!
வால்பாறையை ஆய்வு செய்த கலெக்டர், உருளிக்கல் எஸ்டேட் வழியாக சோலையாறு அணையை பார்வையிட சென்றார். அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டார். 'வால்பாறை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளை, பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைகின்றனர். இதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. கூலி தொழிலாளர்களின் நலன் கருதி மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்,' என, தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதைகேட்ட கலெக்டர், 'டாக்டர் நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.