உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கமிஷனர், உயர் அதிகாரிகள் எங்கே? மக்கள் பிரச்னைகளை யாரிடம் சொல்வது: நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி

கமிஷனர், உயர் அதிகாரிகள் எங்கே? மக்கள் பிரச்னைகளை யாரிடம் சொல்வது: நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி

மேட்டுப்பாளையம்; கமிஷனர், உயர் அதிகாரிகள் எங்கே என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.கோவை மாவட்டம் காரமடை நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நகராட்சி தலைவர் உஷா தலைமையில் நடந்தது. காரமடை நகராட்சி கமிஷனர் மதுமதி மற்றும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவில்லை.நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்ளாததால், மக்கள் பிரச்னைகளை எப்படி பேசுவது,யாரிடம் சொல்வது என்று கூறி கவுன்சிலர்கள் பலரும் கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.பின், தலைவர் உஷா பேசுகையில், காரமடை நகராட்சிக்கு புதிய கமிஷனர் வந்துள்ளார். அவர் முதன் முதலாக உயர் அதிகாரிகளுடனான வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அதனால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை, என்றார்.விக்னேஷ் (பா.ஜ.,): இந்த கூட்டத்தில் 80க்கும் மேற்பட்ட தீர்மானம் உள்ளது. இத்தனை தீர்மானத்தின் மீது எப்படி விவாதம் செய்து, மக்கள் பிரச்னைகளை பேசி நிறைவேற்ற முடியும். மன்ற கூட்டத்தில் கமிஷனர் மற்றும் முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லை. யாரிடம் குறைகளை முறையிடுவது. வனிதா (அ.தி.மு.க): காரமடை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குட்டையை தூர்வாரியதில் முறைகேடு உள்ளது. அதே ஒப்பந்தரார் தான் 27 வது வார்டில் தார் சாலை அமைத்தார். அது தரம் இல்லாமல் உள்ளது. பல முறை சொல்லியும் நடவடிக்கை இல்லை.ராமுகுட்டி (தி.மு.க.):சொத்து வரியை உயர்த்திக்கொண்டு போவதால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எதன் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது, எவ்வுளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற எந்த விவரமும் இல்லை.குருபிரசாத் (தி.மு.க.):திடீரென தீர்மானம் கொண்டு வந்தால் எப்படி. எந்த திட்டம் கொண்டு வரப்போகிறோம், எதை செயல்படுத்த போகிறோம் என கவுன்சிலர்களுக்கு எதுவும் தெரிவிப்பது இல்லை. நகராட்சியில் புதிதாக கட்டிய கட்டத்தில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.அமுதவேணி (தி.மு.க.)-; எனது வார்டில் பல இடங்களில் புதர் மண்டி உள்ளது. சொந்த செலவில் இயந்திரம் வாங்கி வைத்தும், அப்பணியை மேற்கொள்ள நகராட்சியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுவதில்லை. ராம்குமார் (தி.மு.க.):வார்டுகளுக்கு ஆய்வுக்கு வரும் கமிஷனர், அதனை அந்த வார்டு கவுன்சிலர்களுக்கே தெரிவிப்பது இல்லை. கமிஷனரை சந்திக்க சென்றாலும் சந்திக்க முடிவதில்லை. மக்கள் பிரச்னையை அதிகாரிகளிடம் தெரிவிக்க கூட முடிய வில்லை. நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்காத நிலையில், 82 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 28, 2024 08:16

ஒன்றிய அரசுத்துறைகள் மாதிரி எல்லாத்தையும் உணையத்துக்கு மாத்திடுங்க. உதாரணமாக உருப்படாத income tax, IEPF போன்ற வலைத்தகங்கள். அங்கே குறை சொல்ல கூட லாக் இன் பண்ணனும். அதுக்கப்புறம் உங்க குறை எந்த உப துறைக்குன்னு செலக்ட் செய்யறதுக்குக்ளே தலை சுத்தி விழுவீங்க். உடனே இணைய தளம் டைம் அவுட் ஆயி உங்களை வெளியே தள்ளிரும். சூப்பர் இணையதளம்.


சமீபத்திய செய்தி