இழப்பு தொகை வசூலிக்க தாமதம் செய்வதாக புகார்
சூலுார்; கட்டடங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது நிரூபணம் ஆகியும், முன்னாள் ஊராட்சி தலைவரிடம் இழப்பு தொகை வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டம், சூலுார் ஒன்றியத்துக்குட்பட்டது கரவழி மாதப்பூர் ஊராட்சி. இங்கு தலைவராக இருந்த செல்வராஜ், கட்டடங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதிகாரிகளின் தணிக்கையில் முறைகேடு நிரூபணமானது. இதையடுத்து, ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லாததால், சமூக ஆர்வலர் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய, கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மூன்று வருடங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஆறு வாரத்துக்குள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில், ஊராட்சி தலைவரின் பதவிக்காலம் முடித்தது. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பதவிக்காலம் முடிந்து விட்டதால், ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய இயலாத நிலையில், அவர் மீது சர்சார்ஜ் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், மேலும், இழப்பு தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.