உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அறிவித்த குறைந்தபட்சக்கூலி கிடைக்காததால் கவலை

 அறிவித்த குறைந்தபட்சக்கூலி கிடைக்காததால் கவலை

வால்பாறை: அரசு அறிவித்த குறைந்தபட்சக்கூலி கிடைக்காததால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விரக்த்தியில் உள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 1.5 லட்சம் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த, 2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக்கூலியாக, 425.40 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் உத்தரவிட்டார். ஆனால், இன்று வரை அரசு அறிவித்துள்ள குறைந்தபட்சக்கூலி கைக்கு வரவில்லை. இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது: பல்வேறு சிரமத்துக்கு இடையே தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, கடந்த 2021ம் ஆண்டு, ஜூலை மாதம், 31ம் தேதி, தமிழகத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு, 425.40 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால், இன்று வரை தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த கூலி வழங்கப்படவில்லை. தற்போது தினக்கூலியாக, 431 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு அறிவித்த நாளில் இருந்து கணக்கிட்டால் இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 550 ரூபாய் வழங்கப்பட வேண்டும். அரசின் அலட்சியத்தால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொழிற்சங்கங்கள் சார்பில் பேச்சு நடத்தி, அறிவித்த குறைந்தபட்ச கூலியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, தேயிலை எஸ்டேட்களில் ரோடு, தெருவிளக்கு, குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுபற்றி, எஸ்டேட் நிர்வாகங்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை