இழப்பீடு தராத இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஜப்தி உத்தரவு
கோவை: விபத்து இழப்பீடு தொகை வழங்காததால், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தை ஜப்தி செய்ய, கோர்ட் உத்தரவிட்டது. கரூர் அருகேயுள்ள ஆண்டாள் கோவில், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். கோவையில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். 2020, ஜூலை 19ல், சரவணம்பட்டி, கீரணத்தம் ரோட்டில் பைக்கில் சென்ற போது, பின்னால் வந்த பைக் மோதியதில், வெங்கடேசன் படுகாயமடைந்தார். சிகிச்சை அளித்தும், அவரது இடுப்புக்கு கீழ் பகுதி செயல் இழந்தது. இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை சி.ஜே.எம். கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். பாதிக்கப்பட்ட வெங்கடேசனுக்கு, 1.24 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடு வழங்கவில்லை. இதனால், வட்டியுடன் சேர்த்து 1.68 கோடி ரூபாய் வழங்க கோரி, அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த கோர்ட், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள, அதன் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. கோர்ட் ஊழியர்கள் நேற்று முன் தினம் ஜப்திக்கு சென்றனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், பணம் செலுத்த உறுதி அளித்து கடிதம் கொடுத்ததால், ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.