பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி; டிரைவர்கள் அவதி
வால்பாறை,: வால்பாறை பஸ் ஸ்டாண்டில் நிலவும் இடநெருக்கடியால், அரசு பஸ் டிரைவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பல்வேறு வழித்தடங்களில், 44 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் நல்லகாத்து பாலம் அருகே அரசு போக்குவரத்துக்கழத்தின் சார்பில் பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.ஆனால், வால்பாறை நகரில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் பஸ் ஸ்டாண்ட் இருப்பதாலும், பஸ் ஸ்டாண்ட் பள்ளத்தில் அமைந்துள்ளதால்மழை நீர் தேங்கி பயணியர் நிற்க முடியாத நிலை உள்ளதாக கூறி, பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே பயணியர் பயன்பாட்டிற்கு வராமலேயே போனது.இதனிடையே, பொள்ளாச்சி, கோவை, பழநி, திருப்பூர், மன்னார்க்காடு, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மட்டும், புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகிறது.தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படும் காந்திசிலை வளாகம் மிகவும் குறுகலான இடத்தில் உள்ளதாலும், பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புக்களாலும், ஒரே நேரத்தில் மூன்று பஸ்களுக்கு மேல் நிற்க முடியாத நிலை உள்ளது. இதனால், அரசு பஸ் டிரைவகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இடநெருக்கடியால் பயணியர், பள்ளி மாணவ, மாணவியர் தினமும் காலை, மாலை நேரத்தில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை காந்திசிலை வளாகத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க, எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை முறைப்படுத்த வேண்டும். அதாவது, முடீஸ், பன்னிமேடு, ஹைபாரஸ்ட், சின்கோனா, பெரியகல்லார், சின்னக்கல்லார், ரயான் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள் காந்தி சிலையிலிருந்து இயக்க வேண்டும்.ேஷக்கல்முடி, சோலையாறுடேம், வில்லோனி, இஞ்சிப்பாறை, குரங்குமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், ஸ்டேன்மோர் சந்திப்பில் இருந்து இயக்கப்பட வேண்டும்.அதே போல், வெள்ளமலை, அக்காமலை, கருமலை உள்ளிட் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் தற்போது இயக்கப்படும் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தே இயக்கினால் தான், வால்பாறை காந்தசிலை பஸ் ஸ்டாண்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு, கூறினர்.
போராட்டத்துக்கு அனுமதிக்க கூடாது!
வால்பாறை காந்திசிலை பகுதி, தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படும் நிலையில், மிகவும் குறுகலாக உள்ளது. இந்நிலையில், இந்த இடத்தில் பல்வேறு கட்சியினர் அடிக்கடி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, பயணியரும் நிற்க இடமில்லாமல் தவிக்கின்றனர். எனவே, பயணியர் நலன் கருதி காந்திசிலை வளாகத்தில் கட்சியினர் போராட்டம் நடத்த, போலீசார் அனுமதிக்க கூடாது என்பது, மக்களின் கோரிக்கையாக உள்ளது.