காந்திசிலையில் இடநெருக்கடி; அரசு பஸ் இயக்குவதில் சிக்கல்
வால்பாறை; காந்திசிலை வளாகத்தில் நிலவும் இடநெருக்கடியால், அரசு பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வால்பாறை காந்திசிலை வளாகம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. இங்கிருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு அரசு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், காந்திசிலை வளாகத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், அரசு பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. பொதுமக்கள் கூறியதாவது: குறுகலான இடத்தில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால், இடநெருக்கடியில் பயணியர் பஸ் ஏற முடியாமல் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன. காந்திசிலை வளாகத்தில் இடநெருக்கடியால் பயணியர் தவிப்பதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். போலீசார் கூறுகையில், 'காந்திசிலை வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை சுற்றுலா பயணியர் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் அதிகளவில் ரோட்டில் நிறுத்தபடுவதால், பஸ்கள் சென்று வருவதில் சிரமம் உள்ளது. காந்திசிலை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.