கட்டட தொழிலாளி கொலை; இருவருக்கு ஆயுள்
கோவை: கட்டட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள்சிறை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, மசக்காளிபாளையம், பெரியார் நகரை சேர்ந்த மோகன்குமார்,27, பாப்பம்பட்டி, இடையர் பாளையம் ரோட்டை சேர்ந்த அரவிந்தன்,27, இருவரும் நண்பர்கள். இவர்கள் அடிக்கடி சேர்ந்து மது குடிப்பது வழக்கம். கடந்த 2018,ஜூலை, 4ல், சிங்காநல்லுார், பாரதி நகர் பகுதியிலுள்ள தண்டவாளம் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மது குடிக்க போதிய பணம் இல்லாததால், யாரிடமாவது மிரட்டி பணம் பறிக்கலாம் என்று திட்டமிட்டனர்.அந்த நேரத்தில் கோவை, நீலிக்கோணாம்பாளையம், விநாயகர் நகரில் வசித்து வந்த கட்டட தொழிலாளி அய்யப்பன்,60, என்பவர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது, இருவரும் அவரை வழிமறித்து பாக்கெட்டில் இருந்து பணத்தை பறித்த போது தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் சேர்ந்து, அய்யப்பனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர், 350 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து, மோகன்குமார், அரவிந்தன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சசிரேகா, இருவருக்கும் ஆயுள்சிறை, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சிவராமகிருஷ்ணன் ஆஜரானார்.