உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைன் பியூச்சர் மோசடி வழக்கில்  குற்ற நகல் வழங்க தொடர்  தாமதம்

பைன் பியூச்சர் மோசடி வழக்கில்  குற்ற நகல் வழங்க தொடர்  தாமதம்

கோவை; பைன் பியூச்சர் மோசடி வழக்கில், குற்ற நகல் வழங்கப்படாததால், விசாரணை தொடர்ந்து வாய்தா போடப்படுகிறது.கோவையில் செயல்பட்டு வந்த, 'பைன் பியூச்சர்' ஆன்லைன் நிதி நிறுவனம், 49 ஆயிரத்து, 276 பேரிடம், 359 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், 'டான்பிட்' கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அதன் பங்குதாரர்கள் செந்தில்குமார், விவேக், நித்யானந்தம், மேலாளர் சத்யலட்சுமி மற்றும் ஏஜன்டுகள் உள்ளிட்ட, 48 பேருக்கு, குற்ற நகல் வழங்கப்படாததால், சாட்சி விசாரணை துவங்குவதில், தாமதம் ஏற்பட்டு வருகிறது. குற்றப்பத்திரிகை நகல், 50 ஆயிரம் பக்கம் உள்ளதால், 24 லட்சம் பக்கத்துக்கு மேல் நகல் எடுக்க, 1.5 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. கூடுதல் செலவு தவிர்க்க, 'பென்டிரைவில்' பதிவு செய்து கொடுக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை, சென்னை ஐகோர்ட், 2021ல் 'டிஸ்மிஸ்' செய்தது. இதனால், அரசிடம் இருந்து நிதி பெற்றுத்தர பரிந்துரைக்கப்பட்டது. நகல் எடுக்க நிதி ஒதுக்காததால், நான்கு ஆண்டுகளாக வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த முடியாமல் தொடர்ந்து வாய்தா போடப்படுகிறது.கோவை 'டான்பிட்' கோர்ட்டில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் மட்டும் ஆஜராகினர். அதனால், ஜூலை, 23க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ