வடக்கிபாளையத்தில் கொப்பரை ஏலம் துவக்கம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்துள்ள வடக்கிபாளையத்தில் நேற்று கொப்பரை ஏலம் துவங்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்துள்ள வடக்கிபாளையம் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முதல் முறையாக நேற்று முதல் கொப்பரை ஏலம் துவங்கப்பட்டது. விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ், வேளாண்மை உதவி அலுவலர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.விற்பனை கூட கண்காணிப்பாளர் கூறியாதவது:வடக்கிப்பாளையம் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், மொத்தம், 35 கொப்பரை மூட்டைகளை, 14 விவசாயிகள் கொண்டு வந்தனர். மூன்று வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தர கொப்பரை, 20 மூட்டைகள், குறைந்தபட்சம், 179.99; அதிகபட்சமாக, 180.99 ரூபாய்க்கு ஏலம் சென்றது. இரண்டாம் தர கொப்பரை, 15 மூட்டைகள், குறைந்தபட்சம், 150 அதிகபட்சமாக, 153.50 ரூபாய்க்கு ஏலம் சென்றது.நேற்று முதல் முறையாக நடந்த ஏலத்தில், 2.20 லட்சம் ரூபாய் மதிப்பில், 14.6 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு வந்தது. தொடர்ந்து வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடக்கும்.இவ்வாறு, கூறினார். ஓராண்டு விற்பனை
பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கொப்பரை, தேங்காய் ஏலம் நடக்கிறது. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த நிதியாண்டில், 19 கோடியே, 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 14,652.72 மெட்ரிக் டன் தேங்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 2,588 விவசாயிகள் பயன்பெற்றனர்.மேலும், 28 கோடியே, 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2,592 மெட்ரிக் டன் கொப்பரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 1,788 விவசாயிகள் பயன்பெற்றனர்.இவ்வாறு, கூறினார்.