உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி வெத்து பேச்சு

மாநகராட்சி வெத்து பேச்சு

கோவை மாநகரில் அதிகரித்துவரும் தெரு நாய்களால், பொது மக்கள் பயத்துடன் பயணித்துவருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரையும், பாதசாரிகளையும் துரத்தி கடிக்கும் சம்பவங்கள் பதற வைக்கின்றன. மனிதர்களை மட்டுமின்றி, ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களையும், கூட்டமாக கடித்து குதறுவது படபடப்பை ஏற்படுத்துகிறது.தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வெறிநோய் பாதிப்புகளை தவிர்க்கவும் உக்கடம், சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதுார், வெள்ளலுார் பகுதிகளில் உள்ள கருத்தடை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பிடிக்கப்பட்ட இடங்களிலே விடுவிக்கப்படுகின்றன. கருத்தடை ஊசி செலுத்தப்பட்ட நாய்கள், மீண்டும் கருத்தரிப்பதாக மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் குமுறுகின்றனர்.தற்போது, நல்லாம்பாளையம், வெங்கிட்டாபுரம், இடையர்பாளையம் மாசாணியம்மன் நகர், நீலிக்கோணாம்பாளையம், சின்னவேடம்பட்டி, மேட்டுப்பாளையம் ரோடு, போத்தனுார் கே.டி.எஸ்., கார்டன், சுந்தராபுரம் முதலியார் வீதி, பாப்பநாயக்கன்பாளையம், வீரகேரளம், ஆடிஸ் வீதி, கவுண்டம்பாளையம், துடியலுார், சிங்காநல்லுார் உள்ளிட்ட இடங்களில், தெரு நாய்களின் தொல்லை உச்சத்தில் உள்ளது.நாய்க்கடிக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் தினமும், 50க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.தவிர, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தினமும் குறைந்து ஐந்து பேர் தடுப்பூசி போட வருகின்றனர். அதாவது இவ்வளவு பேரும், நாய்க்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.சமீபத்தில் வடமாநில இளைஞர் ஒருவர், வெறிநாய்க்கடிக்கு ஆளாகி, அரசு மருத்துவமனையில் கொடூரமான முறையில் உயிரை மாய்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.இச்சூழலில், நாய்க்கடி பாதிப்புகளை கட்டுப்படுத்த, பெயரளவுக்கு இல்லாமல், தடுப்பூசி செலுத்தும் பணியை, மாநகராட்சி இன்னும் துரிதப்படுத்த வேண்டும் என்பதே, அனைவரது எதிர்பார்ப்பும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !