கஞ்சாவுடன் ஒருவர் கைது
: கோவில்பாளையம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில், பெ.நாபாளையம் மதுவிலக்கு எஸ்.ஐ., முருகநாதன் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த விஸ்வா,25, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பெட்டிக்கடைகளுக்கு சீல்: சிறுமுகை, ஆலங்கொம்பு பகுதிகளில், பெட்டிக்கடைகளில் சிறுமுகை போலீசார் சோதனை நடத்தினர். இதில், சிறுமுகை தியேட்டர் மேடு, நால்ரோடு, தண்ணீர் தடம் பகுதிகளில் பெட்டி கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 5 கடைகளுக்கு சீல் வைத்த போலீசார், 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கஞ்சா செடி வளர்த்தவர் கைது: மேட்டுப்பாளையம் போலீசார், பாலப்பட்டி அண்ணா நகர் பகுதியில், ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, தலா ஓரடி உயரமுள்ள 3 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தது. அவற்றை வளர்த்த கூலித் தொழிலாளி சக்திவேல்,21, என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் ஒருவர் பலி: மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரித்தீஷ், 24, ஹரிகரன் ,24. இருவரும் நேற்று முன்தினம் இரவு, டூ வீலரில் மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். ஒரு வளைவில் கார் எதிரே வந்ததைப் பார்த்த பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த ரித்தீஷ் பயந்து, நிலை தடுமாறினார். பைக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவரும் காயமடைந்தனர். சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிஹரன் உயிரிழந்தார். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.