உள்ளூர் செய்திகள்

 கிரைம் கார்னர்

ஆர்டரால் வந்தது பேஜார் பேரூர்: பேரூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 27; கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு, சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு பேரூரை சேர்ந்த கார்த்திக், 27, மதிவாணன், 29, குமார், 33 ஆகிய மூவரும், கோகுலகிருஷ்ணனை சப்ளையர் என நினைத்து உணவு ஆர்டர் செய்துள்ளனர். தான் சப்ளையர் அல்ல என கோகுலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோகுலகிருஷ்ணன் தலையில் பாட்டிலால் தாக்கப்பட்டார். பேரூர் போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர். கோகுலகிருஷ்ணன் சிகிச்சை பெறுகிறார். கேபிளை துண்டித்த ஊழியர் கணபதி: இருகூர் சீனுராஜன்,36 கணபதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரிந்த சிவகங்கை தாமரைச்செல்வன், 30 சக ஊழியரின் அறையிலிருந்த போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் வேலையை விட்டு நின்றுள்ளார். அலுவலகத்தின் மீது இருந்த கோபத்தால், அலுவலகத்திற்கு செல்லும் பைபர் கேபிள் ஒயரை துண்டித்துள்ளார். சக ஊழியர் சீனுராஜன் அளித்த புகாரின் பேரில் தாமரைச்செல்வனை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். விபத்தில் இருவர் பலி செல்வபுரம்: செல்வபுரம் கவுதம் கிருஷ்ணா, 18 இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதில், நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி விழுந்தார். பலத்த காயமடைந்தவரை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்தார். சரவணம்பட்டி: சரவணம்பட்டியில் அடையாளம் தெரியாத கார் இருசக்கர வாகனத்தின் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. வாகனத்தை ஓட்டிய, கவுண்டம்பாளையம் சந்திரன். 66 படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பின்னால் அமர்ந்துவந்த, கணபதி சாவித்திரி, 57 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற 4 பேர் மீது வழக்கு உக்கடம்: உக்கடம் பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பெரியகுளம் கன்னிமார் கோவில் அருகே, சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தர்மபுரி சுஜித், 24, பீளமேடு ஸ்ரீகாந்த், 20, கணபதி ராகவன், 23, தொண்டாமுத்துார் ஆகாஷ், 24 என தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்றவர் கைது பேரூர்: பேரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காளம்பாளையம், தீத்திபாளையம் பிரிவு அருகே குனியமுத்தூர், ஆறுமுககவுண்டர் வீதியைச் சேர்ந்த மாரிமுத்து,40 என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். வழக்கு பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர். 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கிணற்றில் ஆண் சடலம் தென்னமநல்லூர்: கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்த காந்துராஜா நாயக்கா,46 குடும்பத்துடன், தென்னமநல்லூர், வடக்கலூரில் வாழை இலை அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஜூலை 7ம் தேதி, காந்துராஜா வீட்டில் சண்டையிட்டு விட்டு, வெளியே வந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்ட தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடையில் திருட முயற்சி காந்திபுரம்: கிராஸ் கட் ரோட்டிலுள்ள, ஆர்.கே.கார்மென்ட்ஸ் கடை உரிமையாளர் கரண்,25 கடந்த ஏப்., 5ம் தேதி மும்பைக்கு சென்று சமீபத்தில் திரும்பினார். கடையின் பின்பக்க கதவை உடைக்க முயற்சி நடந்து இருப்பதை பார்த்து போலீசில் புகார் அளித்தார். கடந்த ஏப்., மாதம் அதே பகுதியில், சில்வர் பேலஸ் எனும் கடையில், 70 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது. இவ்வழக்கில் கைதான உத்திரபிரதேசத்தை சேர்ந்த, ராகுல்சிங், ரஞ்சித்குமார் சிறையில் உள்ளனர். இவர்களே ஆர்.கே. கார்மென்ட்ஸ் கடையிலும் திருட முயற்சித்து இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மின் விபத்தில் ஒருவர் பலி சித்தாபுதுார்: நியூ சித்தாபுதுார் பகுதியில் தனியார் பார்சல் நிறுவன லாரி மின்கம்பத்தில் மோதியதில் மின் ஒயர் அறுந்து சாலையில் விழுந்தது. அந்த வழியாக நடந்து சென்ற மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த சுதாகரன், 38 மின் ஒயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் லாரியை கவனக்குறைவாக ஓட்டி மின்கம்பத்தில் மோதிய டிரைவர் விஜயக்குமார், 33, தனியார் சரக்கு போக்குவரத்து நிறுவன மேலாளர் மணிகண்டன், 33 ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 30 சவரன் கொள்ளை; ஒருவர் கைது கோவை: நேத்ரா நகரில் வசிப்பவர் குப்புசாமி, 70. மனைவியுடன் இரவில் அறையில் உறங்கிக்கொண்டு இருந்தார். சாவியை கதவிலேயே விட்டுள்ளனர். மர்மநபர்கள் ஜன்னல் வழியாக கைவிட்டு கதவை திறந்து, கீழ் தளத்தில் இருந்த அறையில் நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கில் சி.சி.டி.வி., உள்ளிட்ட சில தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் இருவர் கொள்ளையடித்தது தெரிந்தது. சிறப்பு குழு ஒடிசா சென்று ஒடிசாவை சேர்ந்த சஞ்ஜித்குமார் பாண்டே, 35 என்பவரை நேற்று கைது செய்து அழைத்து வந்தனர். மேலும் ஒருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ