உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உப்பிலிபாளையம் சந்திப்பில் நெருக்கடி! காத்திருந்து மக்கள் அவஸ்தை உடனே காண வேண்டும் தீர்வு

உப்பிலிபாளையம் சந்திப்பில் நெருக்கடி! காத்திருந்து மக்கள் அவஸ்தை உடனே காண வேண்டும் தீர்வு

கோவை;கோவை, உப்பிலிபாளையம் சந்திப்பில் வாகன ஓட்டிகள் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், 'ரவுண்டானா' டிசைனை மாற்றியமைத்து, போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியம்.கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டியுள்ள மேம்பாலத்தை, 10 நிமிடத்தில் கடக்கலாம். இப்பாலத்தில் சென்று வருவதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. பாலம் துவங்குமிடமான உப்பிலிபாளையம் சந்திப்பிலும், முடியும் இடமான கோல்டுவின்ஸ் கடந்து தொட்டிபாளையம் பிரிவிலும், வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். பீக் ஹவர்ஸில் நத்தை போல் வாகனங்கள் ஊர்கின்றன. உப்பிலிபாளையம் சந்திப்பில், சாலையின் அகலத்தை கணக்கிட்டு, வாகன போக்குவரத்தை கணிக்காமல், அவசரகதியில் 'ரவுண்டானா' அமைக்கப்பட்டிருக்கிறது. ரவுண்டானா அமைத்தவுடன், இது குறித்து நமது நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது. பழைய மேம்பாலம் மற்றும் நஞ்சப்பா ரோட்டில் இருந்து வருவோர், எல்.ஐ.சி., சந்திப்பு சென்று திரும்பி வர அறிவுறுத்தப்படுகிறது. எல்.ஐ.சி.,சந்திப்பில், மீண்டும் சிக்னல் முறை கொண்டு வரப்பட்டு, போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு வாகனங்களை நிறுத்தி அனுப்புவதால், அண்ணாதுரை சிலையை கடந்து வரும் வாகனங்கள், ஒசூர் ரோட்டில் வரும் வாகனங்கள், உப்பிலிபாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் தேங்குகின்றன. பழைய மேம்பாலத்தில் இருந்து வருவோர், உப்பிலிபாளையம் சந்திப்பில் திரும்ப வசதியின்றி, எல்.ஐ.சி. சந்திப்பு வரை சென்று, சிக்னலில் சிறிது நேரம் காத்திருந்து, 'யூ டேர்ன்' அடித்து, மீண்டும் உப்பிலிபாளையம் சந்திப்பு சென்று, செஞ்சிலுவை சங்கம் சந்திப்புக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இப்பிரச்னையால், அவிநாசி ரோடு பழைய மேம்பாலம், நஞ்சப்பா ரோடு, ஆடீஸ் வீதி, ஒசூர் ரோடு என பல பகுதிகளிலும், வாகனங்கள் தேங்குகின்றன. இதில், ஆடீஸ் வீதிக்கும் செல்ல விடாமல் 'ஒன் வே' போல் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. பழைய மேம்பாலத்தில் வாகனங்கள் தேங்கும்போது, மில் ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு, ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதேபோல், செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா பகுதியிலும் நெருக்கடி ஏற்படுகிறது. இதுதான் தீர்வு இப்பிரச்னைக்கு, உப்பிலிபாளையம் சந்திப்பில் உள்ள ரவுண்டானா டிசைனை மாற்றியமைத்தால் போதும். கோல்டுவின்ஸ் பகுதியில் தொட்டிபாளையம் பிரிவில் உள்ள 'யூ டேர்ன்' பகுதியிலும் வாகனங்கள் தேங்குகின்றன. கோல்டுவின்ஸ் பகுதியில் ஏற்கனவே இருந்த 'யூ டேர்ன்' வசதியை அகற்றியதே காரணம். மாநில நெடுஞ்சாலைத்துறையும், போக்குவரத்து போலீசும் கால தாமதம் செய்து வருவதால், நெருக்கடி தொடர்கிறது. பண்டிகை நேரத்தில் மக்கள் அவதிக்கு ஆளாவதால், இப்பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில், தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

'உதவ தயாராக இருக்கிறேன்'

மாநில நெடுஞ்சாலைத்துறையில் சாலை பாதுகாப்பு பிரிவில் கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மனு நீதி, இப்பிரச்னைக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறார். அவர் கூறுகையில், ''அவிநாசி ரோட்டில், 15 சிக்னல்கள் இருந்தன. அவற்றில், 14 சிக்னல்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து எளிமைப்படுத்தப்பட்டது. உப்பிலிபாளையம் சந்திப்பு ரவுண்டானாவை 'ஓவல்' போல் வடிவமைக்க வேண்டும். சாலையின் அகலம், வாகன போக்குவரத்துக்கு ஏற்ப டிசைன்மாற்ற வேண்டும். ரவுண்டாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ரோட்டின் ஒருபுறம் 14 மீட்டர் அகலம், மற்றொரு புறம் 8 மீட்டர் அகலம் இருக்கிறது. இருபுறமும் தலா 9 மீட்டர் இடமிருந்தால் போதும். 'லக்கேஜ்' வாகனங்கள் கூட எளிதாக திரும்பிச் செல்லும். அதை விட அதிகமான இட வசதி இருந்தும் நெருக்கடி ஏற்படுகிறது. மீண்டும் கள ஆய்வு செய்து, ரவுண்டானா டிசைனை மாற்றியமைத்தால், வாகனங்கள் தேங்காமல் செல்லும். எல்.ஐ.சி., சந்திப்பு வரை சென்று திரும்ப வேண்டியதில்லை. அரசு துறைகள் கேட்டுக் கொண்டால், உதவுவதற்கு தயாராக இருக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை